தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டு மாடு விற்று பல லட்சம் ஈட்டும் கர்நாடகா

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு மவுசு அதிகரித்து வரும்நிலையில் கர்நாடகாவில் அதிகஅளவு ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்க்கப்பட்டு தமிழகத்தில் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறன.

கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத் தடையால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. கடந்த ஆண்டும் வழக்கம்போல உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. அதிருப்தியடைந்த அலங்காநல்லூர் ஊர் மக்கள் வாடிவாசல் முன் அமர்ந்து,

வாடிவாசலில் காளைகளை அவிழ்த்துவிடும் வரை வீட்டு வாசலை மிதிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பெரிய அளவில் மாணவர்கள் பொதுமக்கள் களமிறங்கி போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்ட திருத்தம் கொண்டு வந்து, ஜல்லிக்கட்டு விளையாட்டுகளை நடத்தின.

மாணவர்கள் போராட்டத்துக்குப் பிறகு, மலேசியாவிலும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தும் அளவுக்கு ஜல்லிக்கட்டு விழாவுக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. வழக்கமாக ஜல்லிக்கட்டு நடைபெறாத திருப்பூர் போன்ற பகுதிகளிலும் கூட தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதனை பார்ப்பதற்காக வருபவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மவுசு அதிகரித்துள்ளதால், ஜல்லிக்கட்டு காளைகளுக்கான தேவையும் ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே வறட்சி நிலவி வருவதாலும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டதாலும் பலரும் காளை மாடுகள் அடிமாடுகளாக விற்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் காளை மாடுகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது. குறிப்பாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் திறன் கொண்ட நாட்டு வகை மாடுகள் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த தேவையை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிராமங்கள் நிறைவு செய்கின்றன. ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஷிகாரிபூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் தற்போது அதிகஅளவு ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படுகின்றன.

இங்குள்ள காளைகளை, ஜல்லிக்கட்டு போட்டியில் பயன்படுத்த 12 லட்சம் ரூபாய் வரை கொடுத்து தமிழகத்தை சேர்ந்தவர்கள் வாங்கிச் செல்கின்றனர். சிலர் போட்டியில் பயன்படுத்துவதற்காக வாடகை அடிப்படையிலும் காளைளை பெற்று செல்கின்றனர். ஷிகாரிபூர் பகுதி காளைகள் விளையாட்டு போட்டிகளுக்காகவே நீண்டகாலமாக பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக ஹலிக்கர் என்ற உள்ளூர் காளை மாடு இனம் விளையாட்டு போட்டிகளுக்கு பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த மாடுகள் தற்போது ஜல்லிக்கட்டு மாடுகளாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போலவே இங்கும் காளை மாடுகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்கு தயார் படுத்தும் விதமாக இங்குள்ள காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. நல்ல பயிற்சி எடுத்த மாடுகள் தற்போது கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன.

இதுகுறித்து இங்குள்ள விவசாயிகள் கூறுகையில் ‘‘எங்கள் பகுதியில் நீண்ட காலமாகவே உழவுக்கு அல்லாமல், போட்டிகளுக்கு பயன்படுத்துவதற்காகவே சிறப்பு தன்மை கொண்ட காளைகள் வளர்க்கப்படுகின்றன. இவை சில ஆயிரம் ரூபாய் விலையில் தான் விற்கப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிகஅளவில் நடப்பதால் அவர்கள் எங்கள் காளைகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் எங்கள் காளைகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. 12 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் தற்போது காளைகளை விற்பனை செய்கிறோம்.

இதனால் உள்ளூரிலேயே காளை கன்றுகளின் விலை உயர்ந்துள்ளது. தரமான காளை கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய ஷிகாரிபூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் திட்டமிடுகின்றனர். எனவே எங்கள் பகுதியில் தற்போது காளை கன்று குட்டிகள் கூட பல ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனையாகின்றன’’ என தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயி குமராண்ணா கூறுகையில் ‘‘தற்போது காளை கன்று ஒன்றை 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளேன். அதனை நன்கு வளர்த்து ஜல்லிக்கட்டு போட்டிக்காக விற்கபோகிறேன். எனது நண்பர் ஜாகிர் சமீபத்தில் அவரது காளை, அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு 11 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்’’ எனக் கூறினார்.

இதுமட்டுமின்றி இந்த கன்னட திரைப்படங்கள், திரை நட்சத்திரங்களின் பெயர்களை இந்த மாடுகளுக்கு வைத்து கர்நாடக விவசாயிகள பிரபலப்படுத்துகின்றனர்.

Google+ Linkedin Youtube