கடந்த ஆண்டு நாட்டில் நடந்த வன்முறையால் ரூ. 80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு: தனிநபருக்கு ரூ.40 ஆயிரம்

கடந்த ஆண்டு நாட்டில் நடந்த வன்முறையால் ரூ. 80 லட்சம் கோடிக்கு மேல்(1.90 லட்சம் கோடி டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது. தனிநபர் ஒவ்வொருவர் மீதும் ரூ.40 ஆயிரம் சுமை விழும் என்று அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் சார்பில் 163 நாடுகள், மாகாணங்களில் கடந்த ஆண்டு நடந்த வன்முறை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

   கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த வன்முறையால், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜிடிபி) 9 சதவீதம் அல்லது ரூ.80லட்சம் கோடிக்கும் அதிகமான (1.190 லட்சம் கோடி டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தனிமனித அடிப்படையில் ஒவ்வொருவர் மீதும் ரூ.40 ஆயிரம்(595 டாலர்) சுமத்துகிறது.

உலகளவில் நடந்த வன்முறையைக் கணக்கெடுக்கும் போது, வாங்கும் சக்தியின் அடிப்படையில், கடந்த ஆண்டு 14.76 லட்சம் கோடி டாலருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் ஜிடிபியில் 12.4 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. தனிநபர் ஒருவருக்கு ரூ.1.34 லட்சம்(1,988 டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது.

உலகில் நடந்த வன்முறை என்று எடுத்துக்கொண்டால், வன்முறையைத் தடுக்கும் முயற்சிகளும், அதனால் ஏற்பட்ட விளைவுகளாலும் ஏற்பட்ட பொருளாதார இழப்பைக் குறிக்கும். இதில் நேரடி, மறைமுக இழப்புகளும் அடங்கும்.

மனிதர்களுக்கு இடையே மோதல் என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. வீடுகள், பணியிடங்கள், நண்பர்கள், மதங்கள், கலாச்சார, அரசியல் குழுக்களுக்கு இடையே முரண்பாடுகள் இருந்தாலும், அவை பெரும்பாலும் வன்முறையில் முடிவதில்லை.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அமைதியின்மை ஏற்படப் பல காரணங்கள் இருந்தபோதிலும், தீவிரவாத செயல்கள் முக்கியமானதாகும். மத்திய கிழக்குநாடுகள், கிழக்கு ஐரோப்பியா, வடகிழக்கு ஆசியா ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுக் குழப்பம், அரசியல் பதற்றம், அகதிகள் வருகை போன்றவை அமைதியின்மையை அதிகரித்துள்ளன.

உலகிலேயே மிகவும் அமைதியான பகுதிகளில் 3-வது இடத்தில் ஆசிய பசிபிக் பிராந்தியம் இருக்கிறது. இங்குள்ள நாடுகளில் உள்நாட்டுக் குழப்பம், அண்டை நாடுகளுடன் மோதல் போக்கு ஆகியவை சமீபகாலமாக குறைந்துள்ளது, அண்டை நாடுகளுடன் நட்பு மலர்ந்துள்ளது, அதேசமயம் குற்றச்செயல்கள், தீவிரவாதம், அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவை தொடர்ந்து நீடித்து வருகிறது.

தெற்காசியாவைச் பொருத்தவரை சீனா இந்தியாவுக்கும் இடையே டோக்லாம் பிரச்சினையால் அமைதியின்மை நிலவியது. ஆனால், சீனா, இந்தியாவின் முயற்சியால் இப்போது அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், அரசியல் சிக்கல், தீவிரவாதம், உள்நாட்டு மக்கள் இடம் பெயர்கள் போன்றவை நீடித்து வருகிறது.

அதேசமயம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகள் தங்களின் அமைதியைத் தொடர்ந்து இழந்து வருகின்றன. வங்கதேசம், மியான்மார் நாடுகளும் ரோஹிங்கியா பிரச்சினையால், அமைதியை இழந்துள்ளன.

ஒட்டுமொத்தமாகக் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டு வன்முறையால் பெரும் பொருளாதார இழப்பு உலகளவில் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டைக்காட்டிலும், 2017-ம் ஆண்டில் 2.1 சதவீதம் வன்முறை அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாகப் பொருளாதாரத்தில் மிகவும் மோசமாகச் சிரியா நாடு பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 68 சதவீதம் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் ஆப்கானிஸ்தான்(63 சதவீதம்), ஈராக்(51சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளன.

மேலும், எல் சால்வடார், தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சைப்பிரஸ், கொலம்பியா, லெசோதோ, சோமாலியா ஆகிய நாடுகளில் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் சுவிட்சர்லாந்து நாடுதான் வன்முறையால் மிகக்குறைந்த அளவுக்குப் பாதிக்கப்பட்ட நாடாகும். அதற்கு அடுத்த இடத்தில் இந்தோனேசியாவும், 3-வது புர்கினா பாசோவும் உள்ளன.

வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள சீனாவுக்கு 1.70 லட்சம் கோடி டாலர், பிரேசிலுக்கு 55 ஆயிரம் கோடி டாலர், ரஷியாவுக்கு 1.13 லட்சம் கோடி டாலர், தென் ஆப்பிரி்காவுக்கு 24 ஆயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நிகழ்ந்த வன்முறையால், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதம் அல்லது 2.67 லட்சம் கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம், அல்லது 32 ஆயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube