சீனாவுக்கு ரகசிய ஆவணங்களை விற்ற வழக்கில் சிஐஏ முன்னாள் அதிகாரி குற்றவாளி: அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு

அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய ஆவணங்களை சீனாவுக்கு விற்றதாக கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் சிஐஏ அதிகாரியை, குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ-வில் புலனாய்வு அதிகாரியாக பணியாற்றியவர் கெவின் பேட்ரிக் மல்லோரி (61). இவருக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சீன உளவுத் துறையில் பணிபுரியும் மைக்கெல் யங் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய ஆவணங்களை தமக்கு வழங்குமாறு கெவினிடம் கடந்த ஆண்டு கோரிய மைக்கெல் யங், இதற்காக பல கோடி டாலர்கள் சீனா சார்பில் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதற்கு கெவினும் ஒப்புதல் தெரிவித்தார். இதையடுத்து, ரகசிய ஆவணங்களை பகிர்வதற்காக, ஒரு நவீன செல்போனையும் கெவினுக்கு மைக்கெல் யங் கொடுத்துள்ளார்.

அதன்படி, அமெரிக்க உளவுத்துறையால் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் சில ஆவணங்களை, மைக்கெல் யங்குக்கு கெவின் அனுப்பி வைத்தார். இதற்கு பிரதிபலனாக சில லட்சம் டாலர்களை கெவினின் வங்கிக் கணக்குக்கு சீனா அனுப்பி வைத்தது.

இந்நிலையில், இந்த ரகசிய பணப் பரிவர்த்தனை விவகாரம் எப்பிஐ அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கெவினிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மேற்குறிப்பிட்ட தகவல்கள் குறித்து கெவின் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சொந்த நாட்டுக்கு எதிராக சதி செய்தல், ரகசிய ஆவணங்களை வெளியிடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு, வாஷிங்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, கெவின் பேட்ரிக் மல்லோரியை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கான தண்டனை விவரம் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google+ Linkedin Youtube