கடந்த ஆண்டில் 19 அரசு வங்கிகளுக்கு ரூ.87 ஆயிரம் கோடி நஷ்டம்; லாபம் ஈட்டிய 2 வங்கிகள்: எஸ்பிஐக்கும் நஷ்டம்

கடந்த 2017-18-ம் நிதி ஆண்டில் 21 அரசு வங்கிகளில் 2 வங்கிகளைத் தவிர 19 வங்கிகளுக்கு ரூ.87 ஆயிரத்து 357 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

இதில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ்மோடியின் கைவரிசையில் ரூ.12 ஆயிரத்து 283 கோடி, ஐடிபிஐ வங்கியில் மோசடி போன்றவை நஷ்டத்துக்கு முக்கியக்காரணமாகும்.

அதேசமயம், 21 அரசு வங்கிகளில் 2 வங்கிகள் மட்டும் லாபம் ஈட்டியுள்ளன. இந்தியன் வங்கி அதிகபட்சமாக ரூ.ஆயிரத்து 258.99 கோடியும், விஜயா வங்கி ரூ.727.02 கோடியும் லாபம் ஈட்டி உள்ளன.

மற்ற 19 வங்கிகளுக்குக் கடந்த நிதி ஆண்டில் ரூ.87,357 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-17-ம் ஆண்டில் இந்த 21 அரசு வங்கிகளின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.473.72 கோடி என்பது கவனிக்கத்தக்கது.

இதில் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு நிரவ்மோடியின் ரூ.14 ஆயிரம் கோடி மோசடி காரணமாக கடந்த நிதி ஆண்டில் அந்த வங்கிக்கு ரூ.12 ஆயிரத்து 282 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-17ம் ஆண்டில் பஞ்சாப் வங்கி, ரூ.1,324.8 கோடி லாபம் ஈட்டிய நிலையில் கடந்த ஆண்டு பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

ஐடிபிஐ வங்கியின் நஷ்டம் கடந்த 2017-18ம்ஆண்டில் ரூ.8 ஆயிரத்து 237.93 கோடியாகும். கடந்த ஆண்டில் நஷ்டம் ரூ.5,158.14 கோடியாகும்.

நாட்டின் மிக்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்குக் கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ.6 ஆயிரத்து 547.45 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2016-17ஆண்டு லாபம் ஈட்டிய நிலையில், இந்த ஆண்டு பெரும் நஷ்டத்தை அந்த வங்கி சந்தித்துள்ளது. கடந்த 2016-17ம் ஆண்டில் ஸ்டேட் வங்கி ரூ.10 ஆயிரத்து 484.10 கோடி லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

அரசு வங்கிகளுக்கு ஆண்டுக்கு ஆண்டுக்கு வாராக்கடன், செயல்படா சொத்துக்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால், பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் வரை அரசு வங்கிகளின் வாராக்கடன் ரூ.8.31 லட்சம் கோடியாகும்

Google+ Linkedin Youtube