'பிக் பாஸ் 2'-வில் கலந்துகொள்கிறேனா?- ராய் லட்சுமி பதில்

'பிக் பாஸ் 2'-வில் கலந்துகொள்ளவில்லை என்று ராய் லட்சுமி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன், ஜூன் 17-ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

விஜய் டிவியில் கடந்த வருடம் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. டிவி, செல்போன், பத்திரிகை என எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், ஆரவ், ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், ஹார்த்தி, அனுயா, காஜல், கணேஷ் வெங்கட்ராம், கஞ்சா கருப்பு, ரைஸா வில்சன், பரணி, ஷக்தி வாசு, சுஜா வருணி, ஜூலி, நமிதா, ஸ்ரீ என மொத்தம் 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 100 நாட்கள் தமிழர்களை ஆர்வத்துடன் பார்க்கவைத்த இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன் எப்போது தொடங்கும் என அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் இரண்டாவது சீஸனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். ஜூன் 17 ஆம் தேதி முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகளின் பெயர்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் பேசப்பட்டு வருகிறது. இதில் நடிகை ராய் லட்சுமி கலந்துகொள்வதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், பிக் பாஸ் 2-வில் கலந்துகொள்ளவில்லை என்று ராய் லட்சுமி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''ஒரே செய்தியை மீண்டும் மீண்டும் சொல்வதில் சோர்வாக இருக்கிறது. நான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஒன்றும் அறியாத பார்வையாளர்களை ஏமாற்றுவதற்காக தொலைக்காட்சியில் உள்ள சிலர் ஏன் என் பெயரை பயன்படுத்துகிறார்கள்'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Google+ Linkedin Youtube