ஆம் ஆத்மி அரசை முடக்கும் மோடி அலுவலகம்; அமித் ஷா உத்தரவுப்படியே சிபிஐ செயல்படுகிறது: அரவிந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசை முடக்கும் விதமாக, துணை நிலை ஆளுநர், ஐஏஎஸ் அதிகாரிகள், சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமானவரித்துறை ஆகியோரைச் சுதந்திரமாகச் செயல்பட பிரதமர் மோடியின் அலுவலகம் திறந்து விடப்பட்டுள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது இல்லத்தில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசைச் செயல்படவிடாமல் பிரதமர் அலுவலகம் முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் அனுஷ் பிரகாஷை அமைச்சர் தாக்கிவிட்டார் என்ற பொய்யான குற்றச்சாட்டின் பெயரில், கடந்த 4 மாதங்களாக அமைச்சர்களுடன் ஆய்வுக்கூட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்க மறுத்து வருகிறார்கள். மேலும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் மிரட்டல் விடுக்கின்றனர்.

இந்த வேலைநிறுத்தப்போராட்டத்தைத் தூண்டிவிடுவதும், ஒருங்கிணைப்பதும் பிரதமர் அலுவலகமும், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலும் தான்.

சிபிஐயும், ஊழல் ஒழிப்புப் பிரிவும் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இதுவரை ஆம் ஆத்மி அமைச்சர்கள் மீதும், அவர்களின் உறவினர்கள் மீதும் 14 வழக்குகள் பதிவு செய்துள்ளன. ஆனால், எந்த வழக்கிலும் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை.

எனக்கு எதிராகக்கூட வழக்குப் பதிவு செய்துள்ளனர், துணை முதல்வர் மணிஷ் சிஷோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், ஏன் கைது செய்யவில்லை. இந்த வழக்குகள் எல்லாம் என்னஆயிற்று எனத் தெரிய வேண்டும்.

சிபிஐ, அமலாக்கப் பிரிவு, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் நோக்கம் ஆம் ஆத்மி அரசை செயல்படவிடாமல் முடக்குவதுதான். தவறான குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி தலைவர்களைச் சிக்கவைத்து, அவர்களுக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். அதனால்தான் நாள்தோறும் எங்களுக்கு எதிராக புதிய புதிய வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

டெல்லி துணை நிலை ஆளுநர், சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை, டெல்லி போலீஸ் ஆகியோரைச் சுதந்திரமாக, எந்தவிதமான தடையும் இன்றி செயல்பட பிரதமர் அலுவலகம் திறந்துவிடப்பட்டுள்ளது. அமித் ஷா உத்தரவுப்படியே சிபிஐ செயல்படுகிறது.

டெல்லி அரசு தன்னுடைய மக்களுக்காக மருத்துவத்துறை, பள்ளிக்கூடங்களில் சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் அரசுகள் ஏன் இதுபோல் செயல்படவில்லை என்று மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். இதனால், டெல்லி அரசு அதிகாரிகளை அவர்களின் பணிகளைச் செய்யவிடாமல், பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்து சிபிஐ தொந்தரவு கொடுத்துவருவது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.''

இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube