வண்டலூர் சாலையை விரிவாக்கம் செய்வது குறித்து திமுக ஏன் கவனம் கொள்ளவில்லை? - முதல்வர் பழனிசாமி கேள்வி

வண்டலூர் சாலையை விரிவாக்கம் செய்வது குறித்து திமுக ஏன் கவனம் கொள்ளவில்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (திங்கள்கிழமை) திமுக எம்எல்ஏ ஐ.பெரியசாமி பசுமை வழி விரைவுச் சாலை, தரமணி முதல் சிறுசேரி வரையிலான உயர்மட்ட பாலம் மற்றும் பெருங்களத்தூர் - வண்டலூர் 8 வழிச்சாலையாக விரிவுபடுத்துதல் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “வண்டலூரில் சாலை விரிவாக்கம் செய்யவில்லை என்று திமுக உறுப்பினர் கூறியிருக்கின்றார். அந்த சாலை மத்திய அரசுக்குட்பட்ட சாலை. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் பராமரிக்கப்படுகின்ற சாலை, மாநில அரசினால் பராமரிக்கப்படுகின்ற சாலை அல்ல.

வண்டலூர் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. திமுக மத்தியில் ஆட்சியில் இருந்தபோது டி.ஆர்.பாலு மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். ஏன் அப்பொழுது இப்பிரச்சினை கவனிக்கப்படவில்லை? சென்னையின் பிரதான சாலையை ஏன் திமுக கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை?

அங்கிருக்கும் போக்குவரத்து நெரிசலை அடிப்படையாகக் கொண்டு, அதனை விரிவுபடுத்த வேண்டும் என தற்போதைய தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்திருக்கிறது.

தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்டப் பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. உயர்மட்டப் பாலத்தைப் பற்றியும் திமுக உறுப்பினர் குறிப்பிட்டார். மாநில அரசைப் பொறுத்தவரைக்கும், அந்த அளவிற்கு நிதி இல்லை. இருந்தாலும், மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறவேண்டும். இல்லாவிட்டால், உலக வங்கியிடமிருந்து தேவையான நிதி பெறுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். மத்திய அரசிற்கும் கோரிக்கை வைத்திருக்கின்றோம். மத்திய அரசினுடைய இத்திட்டம் பரிசீலனையில் உள்ளது.

மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சென்னைக்கு வந்தபொழுது, தரமணியிலிருந்து செங்கல்பட்டு வரை உயர்மட்டச் சாலை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக அரசு வைத்தது. அதையும் நிறைவேற்றித் தருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

கிராமப்புறச் சாலைகளைப் பற்றியும் திமுக உறுப்பினர் கூறினார். கிராமம் வளர வேண்டும், கிராமத்தில் இருக்கின்ற சாலைகள் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னிறைவு திட்டத்தை கொண்டு வந்து கிராமந்தோறும், நல்ல சாலைகளை கிராமத்தில் அமைத்துக் கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்” .

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Google+ Linkedin Youtube