கேள்வி கேட்ட ட்ரூடோ; கடுப்பான ட்ரம்ப்: ஜி7 நாடுகள் கூட்டமும் அமெரிக்காவின் அடாவடியும்

ஜி7 நாட்டில் இருந்து வெளியேறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கனடா பிரதமரை கடுமையாக விமர்சித்த விவகாரம் அந்த அமைப்பின் மற்ற நாடுகளிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பொறுமை இல்லாத ட்ரம்ப், ட்விட் மூலம் உறவை கெடுத்துக் கொண்டார் என ஜி7 நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.

கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் உள்ளடக்கிய ஜி 7 உச்சி மாநாடு கனடாவின் கியூபெக்கில் லமாவ்பே நகரில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தொடக்கம் முதலே அமெரிக்காவுக்கும், மற்ற நாடுகளுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது.

ரஷ்யாவை மீண்டும் ஜி7 நாடுகள் அமைப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி பேசினார். ஆனால் இறத்கு மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ‘பெரியண்ணன்’ மனநிலையுடன் ட்ரம்ப் செயல்படுவதாக மற்ற நாடுகளின் தலைவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக ரஷ்யா விஷயத்தில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ட்வீட் மூலம் உறவை உடைத்த ட்ரம்ப்

இதனால் ட்ரம்ப் தொடக்கத்திலேயே கடும் அதிருப்தி அடைந்தார். இதன் பிறகு பிறநாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்கா அண்மையில் உயர்த்திய இறக்குமதி வரி அடுத்த பிரச்சினையை உருவாக்கியது.

இரும்பு, அலுமினியம் உள்ளிட்டவற்றிக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியுள்ளது சட்ட விரோதமானது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்தார். ஜி7 நாடுகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை பாதிக்கும் இந்த நடவடிக்கையை ட்ரம்ப் திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனால் கடுப்பாகி போன ட்ரம்ப் கூட்டம் முடிவதற்குள் அங்கிருந்து வெளியேறினார். ஜி7 நாடுகளின் கூட்டறிக்கைக்கு அளித்த ஒப்புதலையும் ட்ரம்ப் திரும்ப பெற்றார்.

சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற அவர், விமானத்தில் இருந்த படியே ஜி7 மாநாடு குறித்து காரசாரமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

‘‘இருதரப்பும் பயன் அடையும் வகையில் இல்லை என்றால், நியாமான வர்த்தகம் அல்ல முட்டாள்தனமான வர்த்தகம், எதிரிகள் மட்டுமல்ல, நண்பர்கள் கூட எங்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம்’’ என தெரிவித்தார்.

எரிந்த கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல அமெரிக்க அதிகாரிகளும் நடந்து கொள்ளத் தொடங்கினர். ட்ரம்ப்பின் பொருளாதார ஆலோசகர்,”வர்த்தக வரிவிதிப்பு விவகாரத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் எங்களது முதிகில் குத்திவிட்டார். முதிர்ச்சியற்ற அரசியல் செய்கிறார்” என்று கூறினார்.

அமெரிக்கா மீது ஜி7 நாடுகள் ஆவேசம்

இந்த விவகாரத்தால் ட்ரூடோ மட்டுமின்றி ஜி7 நாடுகளின் மற்ற தலைவர்களும் அமெரிக்கா மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் கூறுகையில் “அளவுக்கு அதிகமாக வைத்திருந்த நம்பிக்கையை ட்ரம்ப் சீர்குலைத்து விட்டார். ஜி7 நாடுகளின் உறவை ஒரே ஒரு ட்வீட் மூலம் உடைத்து விட்டார். அமெரிக்காவே முதன்மையான நாடு என்ற அவரது எண்ணத்திற்கு, ஐரோப்பிய யூனியன் தக்க பதிலடி கொடுக்கும்” என தெரிவித்துள்ளார்.

இதுபோலவே ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலும் ட்ரம்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளர். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘அமெரிக்கா நடத்தி வரும் வரி போரை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அமெரிக்காவின் எதேச்சதிகார போக்கிற்கு இனிமேலும் ஐரோப்பிய யூனியன் அடங்கி போகாது. ட்ரம்பின் வர்த்தக நடவடிக்கைக்கு எதிராக கிளர்ந்தெழுவோம். ஐரோப்பிய யூனியன் மட்டுமின்றி ஜப்பான், கனடா போன்ற நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த பிரச்சினைக்கு தக்க பதிலடி கொடுப்போம்’’ எனக் கூறினார்.

இதுபோலவே ஜி7 நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் மற்ற நாடுகளும் ட்ரம்பின் செயல்பாட்டிற்கு வேதனை தெரிவித்துள்ளன.

Google+ Linkedin Youtube