பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு ரொக்க கையிருப்பு 2 மடங்கு அதிகரிப்பு

பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு பணப்புழக்கத்தின் அளவு இரு மடங்குக்கு மேல் உயர்ந்திருக்கிறது. பண மதிப்பு நீக்கத்தின் போது 8.9 லட்சம் கோடி பணப்புழக்கம் இருந்தது. ஆனால் தற்போது ரூ.19.3 லட்சம் கோடி புழக்கத்தில் இருக்கிறது. மக்களின் ரொக்க கையிருப்பும் 2 மடங்கு உயர்ந்துள்ளது. வங்கிகளில் உள்ள சேமிப்பை தவிர்த்து பொதுமக்களிடம் உள்ள தொகை ரூ.18.5 லட்சம் கோடியாக இருக்கிறது. 2016-ம் ஆண்டு இறுதியில் பொதுமக்கள் வசம் ரூ.7.8 லட்சம் கோடி மட்டுமே இருந்தது.

பணத்தட்டுப்பாடு

சில மாதங்களுக்கு முன்பு ஏடிஎம்களில் பணத்தட்டுபாடு சூழல் இருந்த நிலையில் பொதுமக்கள் வசம் அதிக தொகையை வைத்திருப்பது கவனிக்கத்தக்கது. மக்களிடையே ஏற்பட்டிருக்க கூடிய அச்சம் காரணமாக அதிக அளவிலான தொகையை ரொக்கமாக வைத்திருப்பதால் பணத்தட்டுபாடு உருவாகி இருக்கிறது. பணமதிப்பு நீக்க சமயத்தில் இருந்ததை விட, புழக்கத்தில் உள்ள பணமும், மக்கள் கையில் வைத்திருக்கும் தொகையும் அதிகரித்திருக்கிறது.

பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு 99 சதவீத ரூபாய் நோட்டுகள் மீண்டும் வங்கிக்கே திரும்பி வந்தன. இதனை தொடர்ந்து புதிய ரூ.2,000, ரூ.500, ரூ.200 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டது. ஆனால் எவ்வளவு தொகை திரும்பி வந்தது என்பது குறித்த முழுமையான அறிக்கையை இதுவரை ரிசர்வ் வங்கி சமர்ப்பிக்கவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட பணத் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து ரூ.500 நோட்டுகளை அச்சடிக்கும் எண்ணிக்கையை அரசு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு (2014 மே மாதம்) பொதுமக்களிடம் உள்ள பணத்தின் அளவு ரூ.13 லட்சம் கோடியாக இருந்தது. அரசு பொறுப்பேற்ற பின்பு முதல் ஆண்டில் ரூ.14.5 லட்சம் கோடியாகவும். 2016-ம் ஆண்டு மே மாதத்தில் ரூ.16.7 லட்சம் கோடியாகவும், 2016-ம் ஆண்டு அக்டோபரில் ரூ.17 லட்சம் கோடியாகவும் இருந்தது. 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.10 லட்சம் கோடியாகவும், 2017-ம் ஆண்டு செப்டம்பரில் ரூ.15 லட்சம் கோடியாகவும் இருந்தது.

Google+ Linkedin Youtube