'சாய்ரட்' போன்ற படங்களில் நான் நடிக்க வேண்டுமென்று என் அம்மா விரும்பினார்: ஸ்ரீதேவி மகள் நெகிழ்ச்சி

'சாய்ரட்' போன்ற படங்களில் நான் பணிபுரிய வேண்டுமென என் அம்மா விரும்பினார் என்று மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் மராத்தியில் வெளியாகி, பிரம்மாண்ட வெற்றி பெற்ற 'சாய்ரட் 'படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக  நடித்திருக்கிறார்.

இப்படத்தை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோகர் தயாரிப்பில், இயக்குநர் ஷஷாங் கைடான் இயக்கி இருக்கிறார். இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் இஷான்  (இவர் நடிகர் ஷாகித் கபூரின் தம்பி) நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்தில் டிரெய்லர்  இன்று (திங்கட்கிழமை) மும்பையில் வெளியிடப்பட்டது.

ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில் ஜான்வி கபூர் பேசும்போது, "நான் 'சாய்ரட்' படத்தை என் அம்மாவுடன் பார்த்தேன். அதன்பிறகு நாங்கள் நிறைய விவாதித்தோம். ’சாய்ரட்’ போன்ற படங்களில் நான் பணியாற்ற வேண்டும் என்று அம்மா விரும்பினார். அதன்பிறகுதான் தயாரிப்பாளர் கரண் ஜோகரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது.

நான் என் அம்மாவை இன்று நிறையவே மிஸ் செய்கிறேன். சாய்ரட்டில் கதாநாயகியான ரிங்கு  நடித்ததை போல் யாராலும் நடித்துவிட முடியாது. என்னுடைய கதாபாத்திரம் வித்தியாசமானது. நான் எனது கதாபாத்திரத்தை நேர்மையுடன் செய்திருக்கிறேன்” என்று கூறினார்.

திரைப்பட ரசிகர்கள் பலரும்  'தடாக்' படத்தின் ட்ரெய்லரைப் பாராட்டியும், விமர்சித்து வருகின்றனர். இப்படம் வரும் ஜூலை 21 ஆம் தேதி  வெளியாகிறது.

Google+ Linkedin Youtube