எந்த வழக்கறிஞரும் என் வழக்கை வாதாடத் தயாராக இல்லை: நவாஸ் ஷெரிப்

எந்த வழக்கறிஞரும் எனது வழக்கை வாதாடத் தயாராக இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளதாக பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரைப் பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தது.

இந்நிலையில், வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியதாக அவர் மீது இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நவாஸ் ஷெரிப் மீதான வழக்கை ஒரு மாதத்துக்குள் முடிக்குமாறு கூறியிருந்ததது. இந்த  நிலையில் ஒருமாதத்துக்குள் தன்னால் முடிக்க இயலாது என்று நவாஸ் ஷெரிப்பின் வழக்கறிஞர் கவாஜா ஹரிஸ் இந்த வழக்கிlலிருந்து திங்கட்கிழமை பின் வாங்கிக் கொண்டார்.

இந்த நிலையில் இதுகுறித்து நவாஸ் ஷெரிப் கூறும்போது, "எனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன.  நீதிமன்றத்தின் கண்டிப்பான நிலைமை காரணமாக எந்த வழக்கறிஞர் எனது வழக்கை வாதாடத் தயாராக இல்லை” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, வெளிநாட்டில் நான் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் எதிர்க்கட்சியினரிடம் இல்லை. என்னைத் தண்டிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள் என்று நவாஸ் ஷெரிப் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube