ட்ரம்புடன் செல்பி எடுக்க ஆசை: சிங்கப்பூரில் ரூ 38 ஆயிரத்தை இழந்த தமிழர்

சிங்கப்பூர் வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்திக்கும் ஆசையில், அவர் தங்கிய ஹோட்டலில் 38 ஆயிரம் ரூபாய்க்கு அறை எடுத்து தங்கிய தமிழர் ஒருவர் கடைசியில் அவரை சந்திக்க முடியாமல் திரும்பியுள்ளார். ட்ரம்ப் வாகன அணிவகுப்பு செல்லும் வழியில் எடுத்த செல்பி மட்டுமே அவருக்கு மிஞ்சியது.

சிங்கப்பூரில் நேற்று நடந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்துப் பேசினர். அப்போது அணு ஆயுதங்களை ஒழிக்க வட கொரியா உறுதி அளித்தது. இதுதொடர்பான அமைதி ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் அதிபர்களும் கையெழுத்திட்டனர்.

இதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம்மும் கடந்த 10-ம் தேதி சிங்கப்பூர் சென்றனர். தனித்தனி ஹோட்டல்களில் தங்கியிருந்த அவர்கள் ஏற்கெனவே திட்டமிட்டபடி சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் நேற்று சந்தித்தனர்.

சிங்கப்பூர் வந்த ட்ரம்பை சந்திப்பதற்காக மலேசியாவைச் சேர்ந்த 25 வயது தமிழ் இளைஞரான மகராஜ் மோகன் ஆசைப்பட்டார். அவர் மலேசியாவில் கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வருகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது முதலே ட்ரம்ப் மீதான ஈர்ப்பு மோகனுக்கு அதிகரித்துள்ளது.

யாரும் எதிர்பார்க்காத நிலையில் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற தொழிலதிபரான ட்ரம்பை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மோகன் இருந்தார். அரசு பதவியில் இல்லாததால் அவரை சந்திக்க வாய்ப்பு ஏதும் வாய்க்கவில்லை.

இந்தநிலையில் மலேசியாவின் அண்டை நாடான சிங்கப்பூருக்கு ட்ரம்ப் வந்தநிலையில் அவரை அங்கு சந்திக்க மோகன் முடிவெடுத்தார்.

இதற்காக சிங்கப்பூர் வந்த மோகன், ட்ரம்ப் தங்கியிருந்த ஷாங்கிரி -லா ஹோட்டலுக்கு சென்றார். அங்கு 5 மணிநேரம் வரவேற்பாளர் அறையில் காத்திருந்தார். ட்ரம்ப் வெளியே வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. பல மணிநேரம் காத்திருந்ததால் ஹோட்டல் ஊழியர்கள் அவரை அணுகி எதற்காக காத்திருக்கிறீர்கள் என கேள்வி கேட்டு துளைத்தனர். தர்மசங்கடம் ஏற்பட்டதால் அவருக்கு திடீரென ஒரு யோசனை உதித்தது.

அதன்படி, அந்த ஹோட்டலிலேயே அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி காலையில் எழுந்து ட்ரம்ப் வெளியே வரும் போது அவரை ‘பிடித்து’ விட மோகன் முடிவு செய்தார். ட்ரம்ப் தங்கிய நட்சத்திர ஹோட்டலில் ஒருநாள் இரவு வாடகையாக 38 ஆயிரம் ரூபாய் கொடுத்து அறையை வாடகைக்கு எடுத்து தங்கினார் மோகன்.

காலை வெகு நேரம் முன்பே எழுந்த மோகன் ஹோட்டலின் வரவேற்பாளர் பகுதியில் காலை 6:30 மணி முதல் நின்று கொண்டு ட்ரம்புக்காக காத்து இருந்தார். டரம்ப் வந்தால் அவரிடம் எப்படியும் பேசி விடவேண்டும். பாதுகாவலர்கள் மறித்தாலும் அவரிடம் விஷயத்தை கூறி பேச வேண்டும், ஆட்டோகிராப் வாங்க வேண்டும், முடிந்தால் ஒரு செல்பி எடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் மோகன் இருந்தார்.

ட்ரம்புக்காக சில பரிசுகளையும் அவர் வாங்கி வைத்து இருந்தார். ட்ரம்ப் வரும் நேரம் நெருங்கியது. அவரை அழைத்து செல்ல நூற்றுக்கணக்கான பாதுகாவலர்கள் புடை சூட கவச வாகனம், குண்டு துளைக்காத கார்கள் ஹோட்டல் முன் அணி வகுத்தன. இந்த பரபரப்புக்கிடையே, சுமார் 8:00 மணியளவில் வெளியே வந்த ட்ரம்ப் பாதுகாவலர்கள் புடை சூழ வெளியே வந்தார் ட்ரம்ப். வெகு தூரத்தில் அவரது முகத்தை மட்டுமே மோகனால் பார்க்க முடிந்தது. நெருங்க முடியவில்லை.

கண் இமைக்கும் நேரத்தில் பாதுகாவலர்கள் புடைசூழ வெளியேறிய ட்ரம்ப் அங்கிருந் கிளம்பி கிம் உடனான சந்திப்பு நடைபெறும் சென்டோசா தீ்வுக்கு கிளம்பி சென்று விட்டார்.

ட்ரம்ப்பை பார்த்து விட வேண்டும் என துடித்த மோகனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ட்ரம்பை பார்த்து பேசவோ, செல்பி எடுக்கவோ, ஆட்டோகிராப் வாங்கவோ முடியவில்லை.

வேறு வழியின்றி ட்ரம்ப் அமர்ந்து செல்லும் அணிவகுப்பு வாகனத்துடன் சேர்ந்து மோகன் செல்பி எடுத்துக் கொண்டார்.

இதுகுறித்து மோகன் கூறுகையில் ‘‘மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் கிளம்பும் போதே எனது நண்பர்கள் கூறினர். ட்ரம்பை சந்தித்து பேச வாய்ப்பில்லை என தெரிவித்தனர். பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும். இருந்தாலும் ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் அவரை சந்தித்து விடலாம் என்று எண்ணினேன். இருந்தாலும் ஒருநாள் இரவு ஹோட்டலில் தங்க 38 ஆயிரம் ரூபாய் செலவு செய்வது என்பது எனக்கு அதிகமான செலவுதான். இருந்தாலும் ட்ரம்புக்காக இதை செய்தேன்’’ எனக் கூறினார்.

ட்ரம்ப் அணி வகுப்பு வாகனத்துடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்ட மோகன் அதனை சமூகவலைதளங்களில் பதவிட்டு தனது சந்தோஷத்தை பகிர்ந்து வருகிறார்.

Google+ Linkedin Youtube