பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்; பிஎஸ்எப் வீரர்கள் 4 பேர் பலி

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதில் 4 பிஎஸ்எப் வீரர்கள் பலியாயினர். மேலும் 3 வீரர்கள் காயமடைந் தனர்.

இதுதொடர்பாக பிஎஸ்எப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சம்பா மாவட்டத்தின் ராம்கர் பகுதியில் பிஎஸ்எப் வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இரவு 9.40 மணியளவில் தொடர்ச்சியாக சுட்டனர். நவீன ரக ஆயுதங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடந்தது.

பதிலுக்கு பிஎஸ்எப் வீரர்களும் திருப்பிச் சுட்டனர். இருதரப்பினரின் துப்பாக்கிச் சூட்டின் முடிவில் பிஎஸ்எப் உதவி கமாண்டன்ட் ஜிதேந்தர் சிங், எஸ்ஐ ரஜ்னீஷ், ஏஎஸ்ஐ ராம் நிவாஸ், கான்ஸ்டபிள் ஹன்ஸ்ராஜ் ஆகியோர் இறந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். இந்த சண்டை அதிகாலை 4.30 மணி வரை நடந்துள்ளது இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

ரம்ஜான் மாதத்தில் எல்லை யில் நடந்த 2-வது மிகப் பெரியத் தாக்குதல் இது என்று தெரிய வந்துள்ளது. ஜூன் 3-ம் தேதி இதுபோன்ற தாக்குதலை பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்தினர். இதில் 2 பிஎஸ்எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை ஜம்மு-காஷ்மீர் மாநில போலீஸ் டிஜிபி எஸ்.பி. வைத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ரம்ஜான் மாத நோன்பையொட்டி எல்லைப் பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை இந்தியா நிறுத்துவதாக அறிவித்தது. இருந்தபோதும் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைப் பகுதிகளில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

Google+LinkedinYoutube