முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன் சதம் கண்டு ஷிகர் தவண் சாதனை:ஆப்கானுக்கு இந்தியா விளாசல்

ஆப்கானுக்கு எதிரான வரலாற்று முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன் ஷிகர் தவண் சதம் அடித்து (104 நாட் அவுட்) சாதனை புரிந்துள்ளார்.

இந்திய அணி டாஸ் வென்று விக்கெட் இழப்பின்றி 158 ரன்கள் எடுத்துள்ளது. ஆப்கான் பந்து வீச்சை ஷிகர் தவண் நெட் பவுலர்களை அடிப்பது போல் அடித்து நொறுக்கினார். உணவு இடைவேளையின் போது தவண் 104 நாட் அவுட், முரளி விஜய் 41 நாட் அவுட். 87 பந்துகளில் ஷிகர் தவண் சதம் எடுத்தார்.

உணவு இடைவேளைக்கு முன்பாக முதல் நாள் ஆட்டத்தில் சதம் எடுக்கும் ஒரே டெஸ்ட் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் ஷிகர் தவண்.

முன்னதாக விரேந்திர சேவாக் ஒரு முறை மே.இ.தீவுகளில் உணவு இடைவேளைக்கு முன் சதம் எடுத்திருப்பார், ஆனால் அவருக்கு அது ஒரு சாதனை என்பது தெரியவில்லை 99 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். ஆனால் ஷிகர் தவண் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

முதல் நாள் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்பாக சதம் எடுத்தவர்கள் முன்னதாக ட்ரம்ப்பர், மெகார்ட்னி, டான் பிராட்மேன், மாஜித் கான், டேவிட் வார்னர் ஆகியோர்களாவர்.

இதில் 87 பந்துகளில் அதிவேக முதல்நாள் உணவு இடைவேளைக்கு முன்னதான சத சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஷிகர் தவண். மேலும் ஒரு செஷனில் 100 ரன்கள் எடுப்பதை தவண் 3வது முறையாக நிகழ்த்துகிறார், இவருக்கு முன் டான் பிராட்மேன் மட்டுமே 6 முறை ஒரு செஷனில் 100 ரன்களுக்கும் மேல் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

இந்தியாவை விட சிறந்த ஸ்பின்னர்களா?


டெஸ்ட் போட்டி என்பது வேறு கதை, அதுவும் இந்திய மைதானங்களில் முதல் நாள் பிட்சில் ஸ்பின் வீசுவது அவ்வளவு சுலபமல்ல (அது குழிபிட்சாக இருந்தால் மட்டுமே சாத்தியம்)


ஆனால் பெங்களூரு பிட்ச் கொஞ்சம் புற்களுடன் பிரவுனாகவும் காட்சியளித்தது, வறண்ட பிட்ச்தான், ஆனால் முதல் நாளில் ஸ்பின் எடுக்க இந்தப் பிட்சில் வாய்ப்பில்லை. இந்திய அணியை விட சிறந்த ஸ்பின்னர்கள் எங்களிடம் உள்ளது என்றார் ஆப்கான் கேப்டன் ஸ்டானிக்ஸாய்.


ஆனால் ரஷீத் கான் ஷார்ட் பிட்ச், புல்டாஸ் என்று வீசி 7 ஓவர்களில் 51 ரன்களையும் மொகமது நபி 4 ஓவர்களில் 22 ரன்களையும் முஜீப் உர் ரஹ்மான் 4 ஓவர்களில் 32 ரன்களையும் கொடுக்க மூவரும் சேர்ந்து 15 ஓவர்களில் 105 ரன்களை இந்தியா எடுத்த 158 ரன்களை விட்டுக்கொடுத்தனர்.


ரஷீத் கான் பந்தில் ஷிகர் தவண் சதமடிப்பதற்கு முன்பாக எல்.பி.ஆகியிருப்பார், பலத்த முறையீடு, பந்து லைனில் படுகிறது, ஆனால் மேலே செல்வதாக ரீப்ளேக்கள் காட்ட நாட் அவுட் ஆனது. முன்னதாக வஃபாதார் பந்து ஒன்று பிட்ச் ஆகி நின்று எழும்ப தவண் மட்டையில் பட்டது போல்தான் தெரிந்தது, மற்றொரு புறம் மட்டைக் கால்காப்பை அடித்தது போலவும் தெரிந்தது, ஆனால் ஆப்கான் ரிவியூ கேட்கவில்லை.


கேட்டிருந்தால் தவண் முன்னமேயே வெளியேறியிருப்பார், இதுதான் இந்திய அதிர்ஷ்டம் என்பது. இதனை ஒப்பிடும் போது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசினர் என்றே கூற வேண்டும். யாமின் அகமட்சாய் 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்தார், வபாதர் அருமையான வேகத்தில் நல்ல ஸ்விங்குடன் வீசினார்.


ஆனால் ஷிகர் தவண் இருக்கும் பார்முக்கு ஒன்றும் எடுபடவில்லை. இதுவரை 19 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 104 ரன்கள் எடுத்துள்ளார். விஜய்யும் அபாரமான ஒரு சிக்சருடன் 6 பவுண்டரிகள் அடித்து 41 ரன்களுடன் ஆடி வருகிறார். இந்தியா விக்கெட் இழப்பின்றி 158 ரன்கள் எடுத்துள்ளது. நிச்சயம் ஆப்கான் விரும்பும் டெஸ்ட் தொடக்கம் அல்ல இது, உணவு இடைவேளைக்குப் பிறகு இன்னும் சிறந்த உத்திகளுடன் இறங்குவார்கள் என்று எதிர்பார்ப்போம்


Google+ Linkedin Youtube