10வது ‘விஜய் அவார்ட்ஸ்’ ஒளிபரப்பு தேதி அறிவிப்பு

10வது ஆண்டாக நடைபெற்ற ‘விஜய் அவார்ட்ஸ்’ நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் சாதனை படைத்த நடிகர் - நடிகைகள் மற்றும் திரைக்குப் பின்னால் உள்ள கலைஞர்களுக்கு, விஜய் தொலைக்காட்சி விருது வழங்கி கவுரவித்து வரும் விழா ‘விஜய் அவார்ட்ஸ்’. 9 வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்ற இந்த விழா, கடந்த இரண்டு வருடங்களாக சில காரணங்களால் நடைபெறவில்லை.

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, 10-வது வருடமாக இந்த வருடம் விஜய் அவார்ட்ஸ் விருது விழா நடைபெற இருக்கிறது. இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், அனுராக் காஷ்யப், யூகி சேது மற்றும் நடிகை ராதா ஆகியோர் நடுவர்களாக இருந்து இந்த வருடத்துக்கான வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் சிவகுமார், ஏ.ஆர்.ரஹ்மான், நயன்தாரா, அனிருத், சந்தோஷ் நாராயணன், கீர்த்தி சுரேஷ், ரேவதி, சயீஷா, விஜய் சேதுபதி, பிரியா பவானிசங்கர், அதிதி பாலன், பாலா, அட்லீ, புஷ்கர் - காயத்ரி, துல்கர் சல்மான், தனுஷ், கார்த்தி எனப் பலர் கலந்து கொண்டனர்.

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் டீஸர், இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக சயீஷா நடித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. விவசாயி வேடத்தில் கார்த்தி நடித்துள்ளார்.

கடந்த 3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, வரும் 16-ம் தேதி (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கும், 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Google+ Linkedin Youtube