ஜூன் 21-ம் தேதி விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விஜய் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக், ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 62’ என்றே அழைத்து வருகின்றனர்.

‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து இதிலும் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சென்னை, கொல்கத்தா எனப் பல இடங்களிலும் இதன் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ‘தளபதி 62’ படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக், ஜூன் 21-ம் தேதி, அதாவது வருகிற வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சன் தொலைக்காட்சியில் இந்த வெளியீடு நடைபெற இருக்கிறது.

Google+LinkedinYoutube