2,000 குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்த விவகாரம்: ட்ரம்புக்கு எதிராக மெலானியா ட்ரம்ப் விமர்சனம்

அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் தகுந்த ஆவணங்கள் இல்லாத காரணத்தால் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்களை அமெரிக்கா கைது செய்துள்ளது. இதனால் இவர்களது குழந்தைகள் பெற்றோர்களைவிட்டுப் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை எதிர்த்து அமெரிக்காவில் பல இடங்களில் அதிபர் ட்ரம்புக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.  இந்த நிலையில் இதுகுறித்து  அமெரிக்க உள்துறை அமைச்சர் கூறும்போது, “கைது செய்யப்பட்டவர்கள் அனைவரின் மீதும், ஆவணமின்றி எல்லைக்குள் நுழைந்ததற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ட்ரம்பின் இந்த நடவடிக்கையை ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து மெலானியா ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் ஸ்டேபானி கிரிஸம் கூறும்போது, ''குழந்தைகள் அவர்களது பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளதை மெலானியா ட்ரம்ப் விரும்பவில்லை. நாம்  நமது தேசத்தின் அனைத்து சட்ட விதிகளையும் மதிக்க வேண்டும். ஆனால் அதில் மனித நேயம் வேண்டும். குடியேற்ற சீர்திருத்தத்தை  இருபுறமும் கலந்தாலோசித்து ஒருமித்த முடிவு வரும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக ட்ரம்பின் இந்த நடவடிக்கையை ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி லாரா புஷ், இது கொடூரமானது... நேர்மையற்றது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube