ஐசிஐசிஐ வங்கிக்கு இடைக்கால நிர்வாகி நியமனம்: விசாரணை முடியும் வரை சாந்தா கொச்சாருக்கு விடுப்பு

ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியான சாந்தா கொச்சார் மீதான புகார் குறித்த விசாரணை முடியும் வரை வங்கி பணிகளில் இருந்து விலகி இருக்குமாறு அவர் கோரப்பட்டுள்ளார். வங்கியை வழிநடத்த இடைக்கால நிர்வாகியாக சந்தீப் பக்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கொச்சாரின் கணவர், வீடியோகான் குழுமத்துடன் இணைந்து தொழில் புரிந்துள்ளார். அதனால் வீடியோகான் குழுமத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் சாந்தா கொச்சார் ஆதரவாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் இதை ஐசிஐசிஐ வங்கி இயக்குநர் குழு மறுத்தது. கடன் வழங்கியதில் வங்கி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததால் அவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கொச்சார் பணிக்கு வராமல் விடுமுறையில் சென்றார். எனினும் அவர் கட்டாய விடுப்பில் செல்லவில்லை என்று வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் கொச்சார் மீதான விசாரணை முடிந்து அதன் முடிவுகள் வெளியே வரும் வரை நிர்வாக பணிகளில் இருந்து விலகி இருக்க கொச்சாரை, ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. கொச்சாருக்கு பதில் ஐசிஐசிஐ வங்கி இன்சூரன்ஸ் பிரிவு நிர்வாக அதிகாரி சந்தீப் பக்ஷி, ஐசிஐசிஐ வங்கியின் அன்றாட பணிகளை கவனிக்கும் வங்கியின் செயல்பாட்டு அதிகாரியாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 19-ம் தேதி) முதல் புதிய பொறுப்பை ஏற்கும் சந்தீப் ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ புருடன்ஷியல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து திறன்பட செயல்பட்ட சந்தீப், பல துறை பணிகளையும் கவனித்துள்ளார். வங்கித்துறையிலும் நீண்ட அனுபவம் கொண்டவர் ஆவார்.

Google+ Linkedin Youtube