'உங்களை எல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கு': பிக்பாஸ் போட்டியாளர்களை வடிவேலு பாணியில் கலாய்த்த ஓவியா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்ட ஓவியா வெளியில் செல்லும்போது உங்களை எல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கிறது என்று வடிவேலு பாணியில் கூறி சிரித்துவிட்டுச் சென்றது போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஹைலைட்டே ஓவியாதான். கடந்த ஆண்டு அவர் பிக் பாஸ் போட்டியின் மூலம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார். வெளிப்படையாகக் கருத்தைக் கூறுவது, உதாசீனப்படுத்தியவர்களை அலட்சியமாகக் கையாண்டது போன்றவை அவருக்கு பலத்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

ஓவியா ஆர்மி என்று ஒன்றை ரசிகர்கள் ஆரம்பித்ததும், ஓவியாவை ஜூலி எதிர்த்து நடந்ததால் அவர் வெளியே செல்லும்போது அவரை எதுவும் செய்யக்கூடாது என்று கமல் கூறும் அளவுக்கு ஓவியாவுக்கும் வெறித்தனமாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது.

இந்நிலையில் பிக் பாஸ்-2 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. 16 போட்டியாளர்கள் களம் இறங்கிய நிலையில் வாசகர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் விதமாக 17-வது போட்டியாளராக ஓவியாவை களம் இறக்கினார்கள். ஓவியா விருந்தினராக உள்ளே சென்றார். ஆனால் உள்ளே உள்ள போட்டியாளர்களிடம் அவரும் ஒரு போட்டியாளர் என்று தான் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினர்.

ஓவியாவின் என்ட்ரி பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியதைப் பார்க்க முடிந்தது. சில மணி நேரங்கள் உள்ளே இருந்த ஓவியா ‘தான் ஒரு விருந்தினர்’ என்று அறிவித்து வெளியேறினார். அனைவரிடமும் கைகுலுக்கிய பின்னர் அவர் வெளியேறும் முன் வாசல் அருகில் நின்று உற்சாகமாகக் கையசைத்தார். போட்டியாளர்களும் உற்சாகமாக கையசைத்தனர்.

அப்போது ஓவியா திடீரென “உங்களை எல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கிறது” என்று வடிவேலு பாணியில் கூறினார். அதைப் பார்த்த போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனாலும் ஓவியா சிரித்துக்கொண்டே “ஆமா எனக்கு நன்றாகத் தெரிகிறது, என்ன நடக்கும் என்று” என்று சிரித்தபடியே கூறிவிட்டுச் சென்றார். என்ன சொல்கிறார் ஓவியா என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் போட்டியாளர்கள்.

ஆமாம், ஓவியா சொன்னது போல் என்ன நடக்கப்போகிறது. அவருக்கு என்ன தெரிந்தது? ஒருவேளை போட்டி என்ற பெயரில் போட்டியாளர்களை வறுத்தெடுக்கப்போகிறார்களோ, ஓவியா அதைத்தான் குறிப்பிட்டாரா? போகப்போகத் தெரியும்.

Google+ Linkedin Youtube