மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூரை தேர்ந்தெடுத்ததற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள  கடிதத்தில், “எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூரை தேர்ந்தெடுத்ததற்காக எனது சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் சிறந்த மருத்துவ சிகிச்சை, மருத்துவ கல்வி மற்றும் ஆய்வுகள் ஆகியவற்றை மேற்கொண்டு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பதை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இதன்மூலம் தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினருக்கு நன்மை தரும் வகையில், தரமான மருத்துவ கல்வி, ஆராய்ச்சி மற்றும் பொதுத் துறையில் உயர்நிலை சுகாதார வசதி ஆகியவற்றை உறுதி செய்வதற்கான வசதிகள் அதிகரிக்கும்.

தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முழு தகுதிகளும் வாய்ந்த 5 இடங்களை பரிந்துரைத்தது. தற்போது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய தேர்வு செய்யப்பட்டுள்ளதை அறிந்தேன்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் மத்திய அரசுக்கு செய்து தருமாறு தமிழக சுகாதார துறை அமைச்சர் மற்றும் அத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Google+ Linkedin Youtube