அகதிகளாக வரும் மக்களிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் அதிபர் டிரம்ப்: டிவியில் கண்ணீர் விட்டு அழுத பெண் செய்திவாசிப்பாளர்

அமெரிக்க, மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளிடம் இருந்து, குழந்தைகளை வலுக்கட்டாயமாகப் பிரித்து, தனி அறையில் அடைக்கும் அதிபர் டிரம்ப் உத்தரவை நினைத்து தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்.

அமெரிக்காவில் எல்லை வழியாகச் சட்டவிரோதமாக குடியேறும் அகதிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த மே மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, மெக்சிக்கோ எல்லை வழியாக வரும் அகதிகளைச் சட்டவிரோத குடியேற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து காப்பகங்களில் தங்கவைப்பதாகும்.

 

அமெரிக்க சட்டப்படி சட்டவிரோத குடியேற்றத்தில் குழந்தைகள் மீது சட்டநடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதால், குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுகின்றனர்.

அதிபர் டிரம்பின் இந்த உத்தரவுக்கு அவரின் மனைவி மெலேனியா டிரம்ப், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மனைவி, லாரா புஷ் ஆகியோர் கண்டனம் தெரிவித்து, மனிதநேயமற்ற செயல் என்றும் கண்டித்துள்ளனர். ஆனால், அகதிகள் வருகையைக் கட்டுப்படுத்த இதுதான் சரியான வழியாகும் என்று டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார்.

கடந்த மே மாதம் 5-ம் தேதி முதல் ஜுன் 9-ம் தேதி வரை 2,206 பெற்றோர்களிடம் இருந்து, 2,342 பச்சிளங்குழந்தைகள் பிரிக்கப்பட்டு சவுத் டெக்ஸாஸில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் அடுக்குசிறை போல காப்பகம் அமைக்கப்பட்டு அதில் குழந்தைகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் சம்பவம் குறித்து எக்ஸ்குளுசிவாக செய்தி அமெரிக்காவின் எம்எஸ்என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்தச் செய்தியை அரசியல் செய்தியாளர் ராச்செல் மேடோ வாசித்தார். அப்போது அமெரிக்காவுக்கு எல்லை வழியாகச் சட்டவிரோதமாக குடியேறும் மக்கள் சிறைகளிலும், அவர்களின் பச்சிளங் குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களுக்கும் அனுப்பப்படுகிறார்கள்.

இந்த காட்சியைப் பார்க்கும் போதும், குழந்தைகள் கண்ணீர் விட்டு அழும் போதும் வேதனையாக இருக்கிறது என்று கூறிக்கொண்டே ராச்செல் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். பின்னர் ஒரு கட்டத்தில் அழுகையை அடக்கிக்கொண்டு செய்தி வாசித்தார் ஆனாலும், முடியாத காரணத்தால், வேறு வழியின்றி நேயர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு செய்தி வாசிப்பதை நிறுத்தினார்.

ராச்செல் மாடோவின் ஆய்வின்படி, மே மாதம் நாள் ஒன்றுக்கு 47 குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஜுன் மாதம் நாள்தோறும் 67 குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுகின்றனர். சுதந்திரமாக சுற்றித் திரிந்து விளையாட வேண்டிய குழந்தைகளையும், ஆரம்பப் பள்ளிக்கு செல்ல வேண்டிய குழந்தைகளையும் காப்பகம் என்ற பெயரில் சிறையில் அடைத்திருப்பது என்று நியாயமில்லை என்று காப்பகத்துக்கு சென்று பார்த்த வழக்கறிஞர்களும், மருத்துவர்களும் தெரிவித்துள்ளதாக மாடோ தெரிவித்துள்ளார். இந்தக் குழந்தைகளுக்கு சவுத் டெக்ஸாஸில் காம்ஸ், ரேமாண்ட்வில்லே, பிரவுண்ஸ்வில்லே ஆகிய நகரங்களில் காப்பகங்கள் இருந்தபோதிலும், 4-வதாக ஹாஸ்டனில் காப்பகம் திறக்கப்பட உள்ளது.

செய்தி வாசிக்கும் போது கட்டுப்படுத்தமுடியாத அழுகையால் பாதியில் எழுந்து சென்றதற்கு மாடோ ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நேயர்களே என்னை மன்னியுங்கள். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பது என்னுடைய பணி, ஆனாலும், இந்த செய்தியைப் படிக்கும் போது என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வாசிக்க முயற்சித்தபோதிலும் முடியவில்லை எனத் தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube