கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாறு படைத்த பிறகு ஸ்டேடியத்திலிருந்த குப்பைகளை அகற்றிய ஜப்பானிய ரசிகர்கள்

உலகக்கோப்பைக் கால்பந்தில் நேற்று ஜப்பான் அணி கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதன் முதலாக உலகக்கோப்பையில் தென் அமெரிக்க அணியை வீழ்த்திய ஆசிய அணி என்ற பெருமையைத் தட்டி சென்றதோடு, உலகிலேயே சுத்தம், சுகாதாரத்திலும் தாங்களே சிறந்தவர்கள் என்று ஜப்பான் ரசிகர்கள் நிரூபித்தனர்.

ஆட்டம் முடிந்த பிறகு தின்பண்டச் சிதறல்கள், உணவுத்துகள்கள், பேப்பர்கப்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என்று ஸ்டேடியமே நாறிப்போய் கிடந்த நிலையில் தங்கள் உட்கார்ந்து போட்டியை ரசித்த பகுதிகளில் ஜப்பானிய ரசிகர்கள் அனைத்தையும் சுத்தம் செய்து மீண்டும் அதனை ஒரு சுத்தமான இடமாக்கிச் சென்றனர்.

களத்திலிருந்து கொலம்பியாவை அகற்றிய அதே உணர்வுடன் ஸ்டேடியத்தில் இருந்த குப்பைகளையும் ஜப்பான் ரசிகர்கள் அகற்றியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வரும்போதே பெரிய பெரிய பைகளை குப்பைகளை அள்ளிப் போடுவதற்கென்றே கொண்டு வந்தனர் ஜப்பானிய ரசிகர்கள்.

ஜப்பானிய ரசிகர்கள் இவ்வாறு சுத்தம் சுகாதாரத்தை கடைபிடிப்பது முதல் முறையல்ல.

இது குறித்து ஜப்பான் பத்திரிகையாளர் ஸ்காட் மெக்கிண்டைர் பிபிசிக்கு கூறும்போது, “இது கால்பந்துக் கலாச்சாரம் மட்டுமல்ல இது ஜப்பானியக் கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகும்.

கால்பந்து என்பது கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு என்று அடிக்கடிக் கூறப்படுவதைக் கேட்டிருப்பீர்கள், ஜப்பானிய சமூகத்தின் மிக முக்கிய அம்சம் என்னவெனில் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே. இது அனைத்து விளையாட்டுப்போட்டிகளிலும் ஜப்பானியர்கள் செய்வதுதான், கால்பந்திலும் செய்திருக்கிறார்கள்” என்றார்.

இது தங்கள் வேலை மட்டுமல்ல என்று நினைக்கும் ஜப்பானியர்கள் ஸ்டேடியத்தில் வேறு யாராவது குப்பைகளை விட்டுச் சென்றால் கூட அவர்கள் தோளில் தட்டி குப்பையை அகற்றுங்கள் என்று கூறுவது வழக்கம் என்கிறார் மெக்கண்டைர், இந்தப் பழக்கம் குழந்தைப்பருவம் முதல் வளர்த்தெடுக்கப்படும் ஒன்றாகும்.

பள்ளிகளில் குழந்தைகள் தங்கள் இடத்தை தாங்களே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், வகுப்பறைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள அங்கு பழக்கப்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைப் பருவம் முதல் சொல்லிச் சொல்லி வளர்ந்து வந்த இந்தப் பழக்கம் விளையாட்டு ஸ்டேடியம் மட்டுமல்ல எங்கு ஜப்பானியர்கள் கூடினாலும் அங்கு குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துவிட்டுத்தான் நகர்வார்கள் என்கின்றனர் ஒசாகா பல்கலைக் கழக சமூகவியல் துறையினர்.

இந்த வேலையை ஜப்பானியர்கள் தரக்குறைவாக நினைப்பதில்லை, மாறாக பெரும் கவுரவமாகவும் பெருமையாகவும் கருதுகின்றனர்.

அதுவும் பலரது கவனமும் குவிக்கப்பெறும் உலகக்கோப்பை போன்ற நிகழ்வுகளில் நம் பூமியை நாம்தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் வேறு எங்கு ஏற்படுத்த முடியும் என்கிறார் ஜப்பானிய பத்திரிகையாளர் மெக்கண்டைர்.

Google+ Linkedin Youtube