சி.வி.குமார் இயக்கும் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’

சி.வி.குமார் இயக்கும் இரண்டாவது படத்துக்கு ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‘திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட்’ மூலம் பல படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். ‘அட்டகத்தி’, ‘பீட்ஸா’, ‘சூது கவ்வும்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘மாயவன்’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். அத்துடன் ‘கல்யாண சமையல் சாதம்’ என்ற படத்தையும் விநியோகம் செய்துள்ளார்.

தயாரிப்பாளராக இருந்த சி.வி.குமார், ‘மாயவன்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். சயின்ஸ் பிக்‌ஷன் க்ரைம் த்ரில்லராக இந்தப் படம் உருவானது.

இந்நிலையில், தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் சி.வி.குமார். இந்தப் படத்துக்கு ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ எனத் தலைப்பு வைத்துள்ளார். கேங்ஸ்டர் கதையான இதில், பிரதான பாத்திரத்தில் ஒரு பெண் நடிக்கிறார். இதற்காக அறிமுக நடிகை ஒருவரை ஒப்பந்தம் செய்துள்ளார் சி.வி.குமார்.

மேலும், விஜய் சேதுபதி, கலையரசன் என இதற்கு முன் அவருடைய தயாரிப்பில் நடித்த நடிகர்களை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கார்த்திக் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஹரி தஃபுசியா இசையமைக்கிறார்.

Google+ Linkedin Youtube