மனைவியின் மரணத்தால் ஏற்பட்ட துயரம்: சேலையில் தூக்கிட்டு கணவர் தற்கொலை

மனைவி மறைந்த துயரத்தை தாங்க முடியாத கணவர் மனைவியின் சேலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சென்னை பட்டினப்பாக்கத்தில் நடந்துள்ளது.

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன்(32). இவரது மனைவி லட்சுமி(29). இருவருக்கும் திருமண வாழ்க்கை சந்தோஷமாக சென்ற நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் லட்சுமி உடல்நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார்.

மனைவியின் மரணம் கேட்டு கணவர் லட்சுமணன் கதறி அழுதார். அவரை உறவினர்கள் தேற்றி ஈமச்சடங்கை செய்தனர். பொதுவாக மரண வேதனை நாளாக நாளாக குறையும். ஆனால் மனைவியின் மீது அளவற்ற பாசம் வைத்திருந்த லட்சுமணனால் மனைவி இறந்ததை நம்ப முடியவில்லை. அவரால் வேதனையை கட்டுப்படுத்த முடியவில்லை.

தினமும் மனைவியின் பிரிவை எண்ணி கலங்கிக் கொண்டிருந்தார். நாட்கள் மாதங்களாகியது. மூன்று மாதம் கடந்த பின்னரும் பித்து பிடித்தவர்போல் திரிந்த லட்சுமணன் நேற்றிரவு வீட்டிற்கு வந்தவர் வீட்டில் யாருமில்லாத நிலையில் தனது மனைவியின் பிரிவின் துயரத்தை தாங்க முடியாமல் தானும் உயிரைவிட தீர்மானித்துள்ளார்.

பின்னர் பெட்டியிலிருந்த தனது மனைவியின் புடவையை எடுத்து அதை உத்தரத்தில் கட்டியவர் அதில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இரவு பத்து மணி அளவில் வீடு திரும்பிய உறவினர்கள் லட்சுமணன் மனைவியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரது உடலை கீழே இறக்கி போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பட்டினப்பாக்கம் போலீஸார் லட்சுமணன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி பிரிந்த ஏக்கத்தில் அவரது சேலையிலேயே கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Google+ Linkedin Youtube