உபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார்

உத்தரப்பிரதேச மாநிலம், ஹபூரில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்த மக்கள் இரு முஸ்லிம் இளைஞர்களை போலீஸார் கண் முன்னே அடித்து இழுத்துச் சென்றனர். இந்தப் புகைப்படம் வெளியானதையடுத்து, நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பாரத்மைக்காக உபி. போலீஸார் மன்னிப்பு கோரியுள்ளனர்.

ஹபூர் மாவட்டம், பில்குவா பகுதியில் உள்ள பசேவாடா கிராமத்துக்குத் திங்கள்கிழமை காசிம்(வயது45), அவரின் நண்பர் சமயுதீன் ஆகியோர் சென்றனர். அப்போது காசிம்மையும், அவரின் நண்பரையும் பார்த்த அந்தக் கிராமத்தில் உள்ள சிலர் பசுமாட்டை வாங்கிக் கொல்வதற்கு வந்திருக்கிறார்கள் எனத் தவறாக நினைத்து அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதில் வாக்குவாதம் முற்றவே அங்குள்ள மக்கள், காசிம்மையும், சமயுதீனை அடித்து, உதைத்தனர். இருவரின் உடைகளையும் கிழித்து எறிந்த அந்தக் கும்பல், அவர்களை ரத்தம்வர கடுமையாகத் தாக்கி சாலையில் தரதரவென இழுத்துச் சென்றனர். இதை ஒருதரப்பினர் புகைப்படமும், வீடியோவும் எடுத்தனர்.

 

அந்த வீடியோவில், காசிமையும்,அவரின் நண்பரையும் சாலையில் கிடத்தி அந்தக் கும்பல் தரதரவென இழுத்து வந்தனர். அப்போது, இருவரும் சாலையில் உடல் உரசி வலி தாங்கமுடியாமல் கதறுகின்றனர்.ஆனால், இந்தகதறல் சத்தம் எதையும் பொருட்படுத்தாமல் இருவரையும் அந்தக் கும்பல் இழத்துவந்தது.

இந்தக் கும்பலுக்கு முன் 3 போலீஸார் பார்த்துக்கொண்டே சென்றனர். அந்தக் கும்பலில் உள்ள சிலர் தண்ணீர் கூட குடிக்கத் தரக்கூடாது என்றும், இவர்கள் பசுமாட்டை கொல்ல வந்தவர்கள், நாம் தாமதித்து இருந்தால், பசுமாட்டைக் கொண்டு சென்று இருப்பார்கள் என்று கூறிக்கொண்டே அடித்து இழுத்துச் சென்றனர்.

இந்நிலையில் அந்தக் கும்பலில் இருந்து இருவரையும் மீட்ட போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் காசிம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே காசிமையும், அவரின் நண்பரையும் அடித்து இழுத்துச் சென்ற கும்பல் குறித்த புகைப்படம், வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உத்தரப்பிரதேச போலீஸார், அந்த கும்பல் முன் 3 போலீஸார் செயலற்று அந்த கும்பலைத் தடுக்காமல் செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அந்த 3 போலீஸாரையும் சஸ்பெண்ட் செய்து, மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.

இந்தக் கும்பலின் புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்ட உபி. போலீஸார் கூறியுள்ளதாவது: இந்தப் புகைப்படம் போலீஸ் வாகனத்தில் ஏற்றுவதற்காக அந்தக் கும்பலிடம் இருந்து காசிமையும், அவரின் நண்பரையும் மீட்டு வந்தபோது எடுக்கப்பட்டது. ஆம்புலென்ஸ் இல்லாத காரணத்தால், போலீஸ் வாகனத்தில் ஏற்றி அவர்கள்இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தின்போது, போலீஸார் 3 பேரும், இன்னும் கூடுதல் விழிப்புணர்வுடன், பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். மனிதநேய அடிப்படையில் ஒரு உயிரைக் காக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் வகையில் சிறப்பாக பணியாற்றி இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அந்த 3 போலீஸாரும் இடம் மாற்றம் செய்யப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஹபூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சங்கல்ப் கூறுகையில், 2 இளைஞர்கள் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் அதில் ஒருவர் இறந்துவிட்டதால் அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. அந்தக் கும்பலில் இருந்த 2 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பசுக்களைக் கொல்வதற்காக வந்தவர்கள் என்ற வதந்தி பரவியதைத் தொடர்ந்து அந்த இரு இளைஞர்களையும் அந்தக் கும்பல் அடித்து இழுத்து வந்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

Google+LinkedinYoutube