சந்தா கொச்சர் கடன் வழங்கிய விவகாரம்: ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து பதில் வரவில்லை- பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் தியாகி தகவல்

ஐசிஐசிஐ வங்கியில் நிகழ்ந்த நிதி விவகாரம் தொடர்பாக வங்கி தரப்பிலிருந்து இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை என்று பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் (செபி) தலைவர் அஜய் தியாகி கூறினார்.

ஐசிஐசிஐ வங்கியில் ரூ.3,500 கோடி கடன் தொகையை வீடியோகான் குழுமத்துக்கு வழங்கிய விவகாரத்தில் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கொச்சர் மீது புகார் கூறப்பட்டது. வீடியோகான் குழுமத்துக்கு கடன் வழங்கியதன் மூலம் சந்தா கொச்சரின் கணவர் நிறுவனத்தில் வீடியோகான் குழுமம் முதலீடு செய்ததாகவும், இது ஐசிஐசிஐ வங்கி கடன் அளித்ததற்கு பரிசாக அளிக்கப்பட்டது என்று புகார் கூறப்பட்டது.

இந்த விவகாரம் காரணமாக ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் கடுமையாக சரிந்தன. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து சிபிஐ உள்பட பல்வேறு அமைப்புகளும் விசாரணையைத் தொடங்கியுள்ளன. தொடக்கத்தில் சந்தா கொச்சருக்கு தொடர்பில்லை எனக் கூறி வந்த வங்கி இயக்குநர் குழு ஒரு கட்டத்தில் நெருக்குதல் அதிகரிக்கவே விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு கமிஷனை அமைத்துள்ளது.

ஆண்டு விடுப்பில் சென்றுள்ள சந்தா கொச்சர் இதுவரையில் அலுவலகம் திரும்பவில்லை. விசாரணை முடியும் வரை அவரை விடுமுறையில் இருக்குமாறு இயக்குநர் குழு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு ஐசிஐசிஐ வங்கி மற்றும் சந்தா கொச்சருக்கு கடந்த மாதம் 25-ம் தேதி செபி நோட்டீஸ் அனுப்பியது.

அந்த நோட்டீஸில் வங்கிக்கும் வீடியோகான் குழுமத்துக்குமான தொடர்பு, எத்தகைய பரிவர்த்தனைகள் நடைபெற்றன என்றும், வீடியோகான் குழுமத்துக்கும் நியூபவர் ரினுவபிள் நிறுவனத்துக்கும் இடையிலான பரிவர்த்தனை குறித்த விவரங்களை கேட்டுள்ளது. ஆனால் இதற்கு விரைவில் பதிலளிப்பதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை பதில் அனுப்பப்படவில்லை.

2012-ம் ஆண்டில் வீடியோகான் குழுமத்துக்கு ரூ 3,250 கோடி கடன் வழங்கிய விவகாரத்தில் கொச்சரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து செபி விசாரித்து வருகிறது.

இதனிடையே இடைக்கால ஏற்பாடாக வங்கியின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக சந்தீப் பக்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது இயக்குநர் குழுவுக்கு மட்டுமே நேரடியாக பதில் அளிப்பார் என்றும் தெரிவித்துள்ளது.

ஒப்புதல்

நிறுவனங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான விதிமுறைகளுக்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற இயக்குநர் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தியாகி கூறினார்.

நிறுவனங்கள் தங்களது பங்குகளை திரும்ப வாங்குவதற்கான காலம் (பை-பேக்) மாற்றப்பட்டுள்ளது. அதாவது இயக்குநர் குழு ஒப்புதல் அளித்த நாள், நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை, சிறப்பு தீர்மான நிறைவேற்றம் மற்றும் பங்குகளை திரும்ப வாங்கும்போது முதலீட்டாளர்களுக்கு பணத்தை அளிக்கும்காலம் உள்ளிட்டவற்றில் மாறுதல்கள் செய்யப்பட்டு அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

பொதுப் பங்கு வெளியீட்டுக்கான தேதியில் பங்குகளின் விலை நிர்ணயிக்கும் காலம் 5 நாளிலிருந்து 2 நாளாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று தியாகி கூறினார். சந்தை கட்டமைப்பு நிறுவனம் (எம்ஐஐ) நிறுவுவது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் ஆர்.காந்தி தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளும் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டதாகக் கூறினார். பங்குச் சந்தைகள், கிளியரிங் கார்ப்பரேஷன் மற்றும் டெபாசிட்டரிகள் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை இக்குழு பரிந்துரைத்திருந்தது.

எம்ஐஐ நிறுவனத்தில் தகுதியுள்ள உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் டெபாசிட்டரி மற்றும் கிளியரிங் கார்ப்பரேஷனில் 15 சதவீத அளவுக்கு பங்கு வைத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக பல அடுக்கு நிதி நிறுவனங்கள், தகுதியுள்ள அரசு நிறுவனங்கள் ஆகியவை 15 சதவீத பங்குகளை வைத்திருக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் தணிக்கையானது கோடக் குழு பரிந்துரைக்கு ஏற்ப இருக்க வேண்டும், ஏப்ரல் முதல் கட்டாய தணிக்கை அவசியம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது என்றும் அஜய் தியாகி கூறினார். -பிடிஐ

Google+ Linkedin Youtube