அருண் ஜேட்லியின் கருத்து அபத்தமானது: ப.சிதம்பரம் காட்டம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவானவர் என்று அருண் ஜேட்லி கூறியது அபத்தமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று ஒரு பேட்டியில் கூறுகையில், ‘‘மனித உரிமைகள் அமைப்புகள் இடது சாரிகள் குழுக்கள் கையில் எடுத்துள்ளன. அவற்றுக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து வருகிறார். ராகுல் காந்தி சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சி வரலாற்று ரீதியாகவும்,சித்தாந்தரீதியாகவும் இதுபோன்ற மாவோயிஸ்ட், தீவிரவாத குழுக்களை எதிர்க்கிறார்களா. எங்களின் கொள்கை என்பது, மனித உரிமையை நிலைநாட்டுவதுதான். அதனால்தான் மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவம் நடந்தவுடன் ஜம்மு காஷ்மீரில் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றோம்’’ என்று தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதில் அளித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் ஜேட்லியின் கருத்துக்குப் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ‘‘காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாவோயிஸ்ட்களுக்கும், ஜிகாதிகளுக்கும் ஆதரவானவர், அவர்கள் மீது இரக்கம் கொண்டவர் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசி இருப்பது நகைப்புக்குரியது, பொருத்தமில்லாத வார்த்தைகளாகும்.

இந்த இரு குழுக்களையும் காங்கிரஸ் கட்சி கடினமான நிலைப்பாட்டுடன் எதிர்த்து வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஜம்மு காஷ்மீரில் ஜிகாதிகளை ஒடுக்கி, வன்முறைகளைக் கட்டுப்படுத்தியது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் வன்முறைக்கும், குண்டுவீச்சுக்கும், அந்த மாநிலத்தில் எங்களின் ஒட்டுமொத்த தலைமையை குண்டுவீச்சுக்கு இழந்தோம் என்பதை மறக்க முடியுமா’’ என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Google+ Linkedin Youtube