அரும்பாக்கத்தில் ஃபேஸ்புக் மூலம் சிறுமியிடம் பழகி நகை பறித்த கல்லூரி மாணவர்: புகார் வாங்காமல் பெற்றோர்களை 3 நாட்களாக அலையவிடும் ஆய்வாளர்

அரும்பாக்கத்தில் ஃபேஸ்புக் மூலம் சிறுமியிடம் பழகிய கல்லூரி மாணவர் ஒருவர் அந்தச் சிறுமியை ஏமாற்றி 15 சவரன் வரை நகையைப் பறித்துள்ளார். இதுகுறித்த புகார் அளித்தும் பெற்றோரை மூன்று நாட்களாக ஆய்வாளர் அலைக்கழித்து வருவதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

சென்னை சூளைமேடு எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்தவர் கருப்பையா (43). இவரது மகள் கீதா (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சூளைமேட்டில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஃபேஸ்புக் மூலம் சூளைமேடு பத்மநாபா நகரைச் சேர்ந்த ராகுல் குமார் (19) என்ற கல்லூரி மாணவரிடம் பழகியுள்ளார். ராகுல் குமார் பள்ளி மாணவி கீதாவிடம் பழகி மனசை மாற்றி அவரிடமிருந்து சிறிது சிறிதாக நகைகளை வாங்கியுள்ளார்.

இதுபற்றி விவரமறிந்த மாணவியின் பெற்றோர் ராகுல் குமாரைப் பிடித்து விசாரித்தபோது அவர் சரியாகப் பதிலளிக்கவில்லை. அவரது செல்போனை வாங்கிப் பார்த்தபோது அதில் ராகுல் குமார் பல பெண்களிடம் இதேபோல் பழகியிருப்பது தெரியவந்தது.

உடனடியாக இது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோரும் சித்தப்பாவும் புகார் அளித்தனர். ஆய்வாளர் ஜெகதீசன் சிறுமியை அழைத்து விசாரித்துள்ளார். பின்னர் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவரை அழைத்து விசாரித்துள்ளார்.

ஆனால் இந்த வழக்கில் கல்லூரி மாணவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஆய்வாளர் அவரை விடுவித்து அனுப்பியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் புகார் அளித்தும் அதைப் பதிவு செய்யாத ஆய்வாளர் உங்கள் பெண்ணின் பெயர்தான் கெடும் என்று கூறியுள்ளார். நகையை வாங்கித் தருகிறேன் என்று மூன்று நாட்களாக அலைய வைத்துள்ளார்.

இது குறித்து இந்த வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர் விஜயகுமாரிடம் பேசியபோது அவர் கூறியதாவது:

மூன்று நாட்களாக இதற்காகப் புகார் அளிக்க வந்தும் இதுவரை வழக்கை எடுக்க மறுக்கிறார்கள் இன்றும் காலையிலிருந்து ஸ்டேஷனில் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

சிறுமியின் சித்தப்பா விஜய் என்பவர் கூறியதாவது:

பெரிய அநியாயம் நடக்கிறது, பாதிக்கப்பட்ட எங்கள் புகாரை வாங்கவே ஆய்வாளர் மறுக்கிறார், மூன்று நாட்களாக ஸ்டேஷனுக்கு நடையாய் நடக்கிறோம். ஆனாலும் புகாரை வாங்க மறுக்கிறார்கள். குழந்தைகள் நலச் சட்டப்படி புகாரை எடுக்க வேண்டும், ஆனால் ஆய்வாளர் ஜெகதீசன் வேறு மாதிரி பேசுகிறார். உங்கள் பெண்ணை சோதனையிட வேண்டும் என்று மறைமுகமாக பயமுறுத்துகிறார். சம்பந்தப்பட்ட அந்தப் பையனைப் பிடித்து ஸ்டேஷனில் ஒப்படைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அனுப்பி விட்டார்.

உங்கள் மகள் ஏமாற்றப்பட்டது எப்படி தெரிந்தது?

வீட்டில் திடீரென நகை குறைந்தது. அது பற்றிக் கேட்டபோதுதான் இந்த விவரம் தெரிந்தது. ராகுல் குமார் என்பவர் ஃபேஸ்புக் மூலம் பழக்கமானது பற்றித் தெரிந்தது. அந்தப்ப் பையனைப் பிடித்துக் கேட்டபோது சரியான பதில் அளிக்காமல் மழுப்பினார். அவரின் செல்போனை வாங்கிப் பார்த்தோம். அதன் மூலம் அந்த மாணவர் ஏராளமான பெண்களிடம் பழகிவருவது தெரிந்தது. அதில் பல ஆடியோக்கள் பதிவு செய்து வைத்துள்ளார். அதை சாதாரணமாக யாரும் கேட்க முடியாது.

இதைப் பார்த்த பிறகு, எனது அண்ணன் மகள் தன்னிடமும் பழகி தான் சுய தொழில் தொடங்க வேண்டும் என்று நகைகளை வாங்கியதாகக் கூறினார். உடனடியாக அந்தப் பையனைப் பற்றி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.

புகாரை பெற்று வழக்குப் பதிவு செய்தார்களா?

இல்லவே இல்லை, அந்தப் பையனுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதாகத் தெரிகிறது. நியாயமாக மோசடி மற்றும் போக்சோ சட்டத்தில் கைது செய்யவேண்டும். ஆனால் என் அண்ணன் மகளிடம் எல்லா விவரங்களையும் கேட்ட ஆய்வாளர், நாங்கள் கொடுத்த ராகுல் குமாரின் செல்போனில் உள்ள ஆதாரங்களைப் பார்த்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

மூன்று நாட்களாக அலைகிறோம். பாதிக்கப்பட்ட இன்னொரு சிறுமியும் தன்னிடம் பணம் பறித்ததாகப் புகார் அளித்தார். அதையும் ஆய்வாளர் கண்டுகொள்ளவில்லை. இன்று நடவடிக்கை இல்லாவிட்டால் காவல் ஆணையர் அலுவலகத்துக்குத்தான் நேரடியாக என் அண்ணன் மகளை அழைத்துச் சென்று நியாயம் கேட்கப்போகிறோம்.என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிய அரும்பாக்கம் காவல் ஆய்வாளர் ஜெகதீசனை பலமுறை தொடர்பு கொண்டும் அவர் அழைப்பில் வரவில்லை.

குழந்தைகளுக்கான சட்டங்களை அமல்படுத்த தொடர் முயற்சி எடுத்து வரும், இதுபோன்ற வழக்குகளில் போலீஸார் எவ்வாறு செயல்பட வேண்டும் என போலீஸாருக்கு வகுப்பு எடுத்து வரும் சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர். ஆன்ட்ரூவிடம் இது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:

அரும்பாக்கத்தில் 14 வயது பள்ளிச் சிறுமியை ஏமாற்றி 15-க்கும் மேற்பட்ட சவரன் நகைகளை ஒரு கல்லூரி மாணவர் பறித்துள்ளார். புகார் அளித்தும் காவல் ஆய்வாளர் 3 நாட்களாக அலட்சியமாக இருக்கிறாரே?

முதலில் ஒரு விஷயம். குழந்தைகளுக்கான வழக்குகளை அதற்கென இருக்கும் சைல்ட் வெல்பேர் ஆஃபீசர் விசாரிக்க வேண்டும். ஆய்வாளர் இதை விசாரிக்கக் கூடாது. குழந்தைகளுக்கான புகார்களை போலீஸார் சரியாக விசாரிப்பதில்லை என்பதால்தான் அதற்கென ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இதற்கான எஸ்.ஐ.அந்தஸ்தில் தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி நடைமுறைக்கும் கொண்டு வந்துள்ளோம்.

இந்த வழக்கில் ஏன் இவ்வளவு அலட்சியம்?

இதில் இரண்டு விஷயங்களைப் பார்க்கவேண்டும். ஒன்று குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல அலுவலர்தான் விசாரிக்க வேண்டும். அவர் ஏன் இதை விசாரிக்கவில்லை என்பது முதல் கேள்வி.

இரண்டு. சம்பந்தப்பட்ட குழந்தைகள் நல அலுவலர் தவிர காவல் ஆய்வாளர் விசாரிக்கக் கூடாது என்பது விதி. தனக்கு ஏதாவது ஆதாயம் இருப்பதால் அவர் அந்த வழக்கை தான் விசாரிப்பதாக சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவருக்கு சாதகமாக நடப்பதும் சரியான நடைமுறை அல்ல.

இந்த இரண்டு விவகாரங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் 1400 அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுத்துள்ளோம். உரிய  நடக்கவில்லை எடுக்கப்படவில்லை என்றால் கட்டாயம் மேலதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம்.

இதில் என்ன மாதிரியான வழக்குப் பதிவு செய்யவேண்டும்?

கண்டிப்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். சிறுமி என்பதால் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும். ஃபேஸ்புக் மூலம் பழகி ஏமாற்றுவதே போக்சோ பிரிவின் கீழ் வரும், அடுத்து சைபர் பிரிவின் கீழ் வழக்கு தொடர வேண்டும், மூன்றாவதாக நகைகளைப் பறித்து ஏமாற்றியுள்ளதால் மோசடி குற்றச்சாட்டின்படி வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும்.

தற்போது இவ்வாறு நடக்கவில்லை இதில் அடுத்தகட்டமாக பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

இதில் அந்த ஸ்டேஷனில் உள்ள குழந்தைகள் நல அலுவலரான எஸ்.ஐ. தான் பொறுப்பு. அந்தச் சிறுமியை ஆய்வாளரே அடித்தால் கூட அந்த அலுவலர்தான் பொறுப்பேற்பார். ஆகவே அவரிடம் இது குறித்து விளக்கம் கேட்டு பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையாக இதை மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube