‘கொடூரமானது 2 புதிய பந்து முறை’: சச்சின் கருத்துக்கு விராட் கோலி ஆதரவு

ஒருநாள் போட்டிகளில் 2 பந்துகள் பயன்படுத்தும் முறை என்பது பந்துவீச்சாளர்களுக்கு கொடூரமானது, அவர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் முறை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்துத் தெரிவித்துள்ளார்.

2 பந்துகள் பயன்படுத்தும் முறைக்கு சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தநிலையில், அதற்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனுஸ் ஆதரவு தெரிவித்து இருந்தார். இப்போது, சச்சின் கருத்துக்கு விராட் கோலியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒரு நாள் போட்டிகளில் இரு புதிய பந்துகளை இரு முனைகளிலும் பயன்படுத்தலாம் என்ற விதிமுறையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) கொண்டு வந்தது. கிரிக்கெட்டை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும், பார்வையாளர்களுக்கு நல்ல விருந்தாகவும் அமைய வேண்டும் என்பதற்காக ஐசிசி இந்த விதிமுறையைத் திருத்தி அமைத்தது.

இதன் காரணமாக ஒரு நாள் போட்டிகளில் அணிகள் பேட்டிங் செய்யும் போது அதிகமான ரன்களைக் குவிக்க முடியும். ஆனால், பந்துவீச்சாளர்களுக்குப் பந்து தேயாமல் இருப்பதால், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பந்தை சுழலவிடுவதிலும், வேகப்பந்துவீச்சாளர்களுக்குப் பந்தை ஸ்விங் செய்வதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். இதனால், ஆட்டம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே மாறிவிடுகிறது.

இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளை குறிப்பிடலாம். 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான தனது சொந்த சாதனையான 444ரன்கள் என்பதை இங்கிலாந்து முறியடித்தது.

4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 310 ரன்கள் எடுத்ததையும் இங்கிலாந்து அணியினர் மிகவும் எளிதாக சேஸ் செய்து வெற்றி பெற்றனர்.

இதுபோன்று போட்டிகள் அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக மாறுவதற்கு இரு முனைகளிலும், இரு இன்னிங்களிலும் புதிய பந்தை பயன்படுத்துவதே காரணம்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த சச்சின் டெண்டுல்கர், ஒரு நாள் போட்டிகளில் இரு இன்னிங்ஸ்களிலும், இரு முனைகளிலும் பயன்படுத்துவது என்பது ஒருநாள்போட்டியை பேரழிவுக்கு கொண்டு செல்லும். பந்துவீச்சில் ரிசர்வ்ஸ் ஸிவிஸ் என்பதை நீண்டகாலமாகப் பார்க்க முடியவில்லை. பந்துதேய்ந்தால்தானே இதைப் பார்க்க முடியும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதற்கு ஆதரவு தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனுஸ் கூறுகையில், இரு இன்னிங்ஸ்களிலும் புதிய பந்துகளை பயன்படுத்துவதால், ஆக்ரோஷமான பந்துவீச்சாளர்களை உருவாக்க முடியவில்லை. ரிவர்ஸ் ஸ்விங் என்பது அழிந்துவிட்டது என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்திய அணி இங்கிலாந்து புறப்படும் முன் கேப்டன் விராட் கோலி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

புதிய பந்துகளை இரு இன்னிங்ஸ்களிலும், இரு முனைகளிலும் பயன்படுத்துவதால், ஏற்படும் சிரமங்களை ஒரு கேப்டனாக நான் பலமுறை அனுபவப்பட்டு இருக்கிறேன். இந்த முறை பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கொடூரமான முறை என்பதை நான் ஏற்கிறேன்.

பந்துவீச்சாளர்கள் கண்ணோட்டத்தில் இதைப் பார்த்தால், எந்தவிதமான ஆக்ரோஷமான வேகப்பந்துவீச்சையோ அல்லது திணறவைக்கும் சுழற்பந்துவீச்சையோ பந்துவீச்சாளர்களால் வெளிப்படுத்த முடியாது. அதற்கு வாய்ப்பும் இருக்காது.

ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தால் மட்டும் பந்துவீச்சாளர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி பல்வேறு ஸ்விங்களை வெளிப்படுத்த முடியும். இல்லாவிட்டால், பேட்ஸ்மேன்களால் பந்துவீச்சாளர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

நான் ஒருநாள் போட்டிகள் விளையாடிய போது, ஒருபோட்டிக்கு ஒரு புதிய பந்து என்றமுறை இருந்தபோது, ரிவர்ஸ் ஸ்விங் என்பது வேகப்பந்துவீச்சில் முக்கிய அம்சமாக இருக்கும்.

முக்கியமான கட்டங்களில் போட்டியின் முடிவைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பந்தும், ரிவர்ஸ் ஸ்விங்கும் இருக்கும். பந்துகள் தேயும்போது, பேட்ஸ்மேன்கள் விளையாடுவது சவாலாக இருக்கும்.

ஆனால், இப்போது, நேர்மையாகச் சொல்கிறேன், இரு புதிய பந்துகளைப் பயன்படுத்தி பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதுதான் கடினமாக இருக்கிறது, அதிலும் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவோ, அல்லது டெத்பிட்ச் ஆகவோ இருந்தால், பந்துவீச்சாளர்கள் நிலைமை பரிதாபம்தான்.

அணியில் மணிக்கட்டு மூலம் பந்துவீசும் (ரிஸ்ட் ஸ்பின்னர்கள்) பந்துவீச்சாளர்கள் இருந்தால், புதிய பந்துகள் மூலம் 30 ஓவர்களுக்கு பின் ஓரளவுக்கு பேட்ஸ்மேன்களுக்குநெருக்கடி கொடுக்க முடியும். ஆனால், ஒவ்வொரு அணிக்கும் இந்த விஷயம் சாத்தியம் என்று என்னால் கூற முடியாது. அவ்வாறு சிறந்த பந்துவீச்சாளர்கள் அமைவதும் கடினமாகும்.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube