விஜய்யின் ‘சர்கார்’ அப்டேட்: லாஸ் வேகாஸில் ஓப்பனிங் பாடல்

விஜய் நடித்துவரும் ‘சர்கார்’ படத்தின் ஓப்பனிங் பாடல், லாஸ் வேகாஸில் படமாக இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்துக்கு ‘சர்கார்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்த நாளை (ஜூன் 22) முன்னிட்டு கடந்த 21-ம் தேதி தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அறிவிக்கப்பட்டது. ‘சர்கார்’ என்பதற்கு ‘அரசு’ என்பது பொருளாகும்.

‘சர்கார்’ படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அரசியல் சார்ந்து இந்தப் படம் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெறும் ஓப்பனிங் பாடலை, அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் மாகாணத்தில் படம் பிடிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஜூலை மாத இறுதியில் அங்கு படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

‘சர்கார்’ படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘என்.ஜி.கே.’ படமும் தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Google+LinkedinYoutube