‘இதுவரையில்லாத முழுநிறைவான வேகப்பந்துவீச்சு இப்போது நம்மிடம்’ : சச்சின் டெண்டுல்கர் பெருமிதம்

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் இதுவரை இல்லாத அளவுக்கு முழுமை பெற்ற வேகப்பந்துவீச்சு நம்மிடம் இருக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு 3 மாத சுற்றுப்பயணம் சென்றுள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. அந்நாட்டு அணியுடன் ஒருநாள், டி20, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடுகிறது.

   

இதில் ஆகஸ்ட் 1-ம் தேதி பிரிம்மிங்ஹாமில் தொடங்க உள்ள டெஸ்ட் தொடரின் மீதுதான் அனைவரின் பார்வையும் இருக்கிறது. இரு அணிகளும் எப்படி மோதிக் கொள்ளப்போகின்றன என்பது சர்வதேச கிரிக்கெட் உலகில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் இந்திய அணியன் கேப்டனும், ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணி குறித்து சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் பார்த்தவரையில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் முழுநிறைவு பெற்ற வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும் அணியாக இப்போது திகழ்கிறது. என்னுடைய கண்ணோட்டத்தில் இப்போதுள்ள இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு மிகச்சிறப்பாக இருக்கிறது. வீரர்களும் பல்வேறு விதங்களில் அற்புதமாகப் பந்துவீசுகிறார்கள்.

நம்முடைய அணிகளில் தற்போது, ஸ்விங் பவுலர் புவனேஷ் குமார், உயரமான பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா, பேட்ஸ்மேன்கள் கணித்து விளையாட முடியாத அளவுக்கு வேகமாகப் பந்துவீசக்கூடிய பும்ரா, கையில் இருந்து வேகமாகப் பந்து வெளியேறும் வகையில் பந்துவீசக்கூடிய உமேஷ் யாதவ் ஆகியோர் என நல்ல கலவையில் பந்துவீச்சாளர்கள் அமைந்திருக்கிறார்கள்.

இந்த பந்துவீச்சாளர்களில் சிலர் பேட்டிங்கிலும் ஓரளவுக்கு நிலைத்து ஆடும் திறமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக புவனேஷ் குமார், ஹர்திக் பாண்டியா ஆகியோர் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு, பேட்டிங்கிலும் தேவைக்கு ஏற்றார்போல் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். இதில் புவனேஷ் குமார் ஒருநாள் போட்டி, டி20, டெஸ்ட் போட்டி அனைத்தும் தன்னை மாற்றிக்கொண்டு பந்துவீசும் திறமை படைத்தவராக இருக்கிறார். தங்களை 3 விதமான போட்டிகளுக்கும் இருவரும் தங்களை சமன் செய்து கொள்வது சிறப்பாகும்.

எந்தமாதிரியான கலவையில் வீரர்கள் களமிறங்க வேண்டும் என்று நான் கூற இயலாது. அந்தச் சூழலுக்கு ஏற்றார்போல், எதிரணியைப் பொருத்து அணி நிர்வாகமும், கேப்டனும்தான் எப்படிப்பட்ட வீரர்கள் களமிறங்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். ஆடுகளத்துக்கு ஏற்றார்போல் ஸ்விங் பந்துவீச்சும், வேகப்பந்துவீச்சும் கலந்து இருக்கும் வகையில் இருக்கலாம். அந்தவகையில் நாம் வீரர்களைத் தேர்வு செய்யலாம்.

நம்முடைய அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு, பேட்டிங்கிலும் முக்கியமான கட்டங்களில் ஓரளவுக்கு ரன்கள் சேர்க்கக்கூடிய வீரர்கள் இருப்பது சிறப்பாகும். இதுபோன்ற பங்களிப்புதான் நம்மையும், அணியையும் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்.

நான் கடந்த 1990-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டுவரையிலான இங்கிலாந்து தொடரில் இடம் பெற்று இருக்கிறேன். இந்திய அணி அங்கு டெஸ் போட்டிவிளையாடும் போது மிகவும் இனிமையான காலநிலை நிலவும்.

ஆடுகளமும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். அது அங்குநிலவும் காலநிலையைப் பொறுத்து அது மாறுபடும். யாரும் குளிர்ந்த, ஈரமான இடத்தில் விளையாட விரும்பமாட்டார்கள். நல்ல கிரிக்கெட்டுக்கு நல்ல சூரியஒளியுடன் கூடி, வெதுவெதுப்பான காலநிலை விளையாட இனிமையாக இருக்கும்.

ஆகஸ்ட்மாதம் இங்கிலாந்தில் காலநிலை சிறப்பாக இருக்கும் என்பதால், இந்திய அணிக்கு எந்தவிதத்திலும் சிக்கல் இருக்காது. காலநிலைக்கு ஏற்றார்போல் நாம் மாறிக்கொள்ள வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே இங்கிலாந்து சென்றிருப்பது நல்லவிஷயம். டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணிக்கு 5 வாரங்கள் வரை அவகாசம் இருப்பதால், தங்களைச் சூழலுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்வார்கள்

இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube