வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கும் சிம்பு

வெங்கட்பிரபு இயக்க இருக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார்.

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்துக்குப் பிறகு சிம்புவின் சினிமா வாழ்க்கையே அவ்வளவுதான் என்று பேசினார்கள். ஆனால், சினிமாவில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் வெற்றி - தோல்வி சகஜம்தான். இதை நன்றாகப் புரிந்து கொண்டார் சிம்பு. படம் தோல்வி அடைந்ததும் முடங்கிப் போகாமல், அடுத்து என்ன என்பதை நோக்கி நகர்ந்தார்.

அதனால்தான், மணிரத்னம் இயக்கியுள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் என மல்ட்டி ஸ்டார்ஸ் நடித்திருக்கும் இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் சிம்பு.

அதைத் தொடர்ந்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிம்பு. ‘வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்’ சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர் - நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன்பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா 2’ படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டாக வருகிறார் என சிம்பு மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு இருந்தது. அதனால்தான் அவரை வைத்துப் படமெடுக்கத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தயங்கி வந்தனர். இப்போது சிம்பு அப்படி நடந்து கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Google+LinkedinYoutube