நீதிமன்றத்தில் சரணடைந்தவரை கைது செய்த போலீஸார்: தலைமை நீதிபதி கோபம், அறிக்கை அளிக்க உத்தரவு

கொலை வழக்கில் சரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் சென்று கைது செய்த கோவை போலீஸார் மீது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் கொலை வழக்கில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த சந்தோஷ் என்பவர், கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தனது வழக்கறிஞர் நடராஜன் என்பவரின் உதவியுடன், திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அப்போது சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமை காவலர் ராபர்ட் ஓட்டுநர் வேலன் ஆகியோர் நீதிமன்ற அறைக்குள் புகுந்து, சந்தோஷை கைது செய்ததாக புகார் எழுந்தது.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு திருப்பூர் பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து விரிவான அறிக்கையை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு திருப்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அனுப்பி வைத்தார்.

அறிக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பார்வைக்கு சென்றது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று தமிழக அரசு பிளீடரிடம் தலைமை நீதிபதி கண்டனத்தை பதிவு செய்தார்.

நீதிமன்றத்தில் சரணடைய வந்தவரை நீதிமன்றத்திற்குள் நுழைந்து எப்படி கைது செய்யலாம்? இந்த செயல், உச்சநீதிமன்ற உருவாக்கிய விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது.

குற்ற வழக்குகளில் தேடப்படும் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்து விட்டால், நீதிமன்றத்திற்குள் சென்று அவரை கைது செய்யக் கூடாது என்பது கூட காவல்துறையினருக்கு தெரியாதா? இந்த செயலை செய்த காவல்துறையினர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டப்பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு போலீஸார் மீது தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தில் இருந்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிசங்கரிடம் காவல்துறையினர் செயலுக்கு தனது அதிருப்தியை தலைமை நீதிபதி தெரிவித்தார்.

காவல்துறையினர் செயல் நாம் சுகந்திர நாட்டில் தான் வாழ்கின்றோமா? நாகரீகமான நாடா? என்று கேள்வி எழுப்பினார். இது போன்ற செயல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. காவலர்களின் செயல் கண்டனத்திற்கு உரியது. நீதிமன்ற அறைக்குள் சென்று யாரையும் கைது செய்யக்கூடாது என்பது கூட காவலர்களுக்கு தெரியவில்லை.

இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதனை நீதிமன்றம் முக்கிய பிரச்சனையாக பார்க்கிறது. சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்காக பதிவு செய்வதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், இது தொடர்பாக விரிவான அறிக்கை அளிப்பதாகவும், கால அவகாசம் தேவை என தெரிவித்தார். இதையடுத்து வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தார்.

Google+ Linkedin Youtube