ஆப்கானில் தற்கொலைப் படை தாக்குதல்: 9 போலீஸார் பலி

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 9 போலீஸார் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறும்போது, ”ஆப்கானிஸ்தானில் கிழக்குப் பகுதியிலுள்ள குனார் மாகாணத்தில் உள்ளூர் போலீஸாரின் சோதனை சாவடியில் தீவிரவாதிகள் திங்கட்கிழமை தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இதில் 9 போலீஸார் பலியாகினார். பலர் காயமடைந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பு பொறுப்பேற்கவில்லை.

2010 ஆம் ஆண்டுமுதல் ஆப்கனில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் உள்ளூர் காவலர்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றனர்.

அதே வேளையில் அரசுக்கு எதிராக போலீஸ் மீது தாக்குதல் நடந்துவதை தலிபான்ககளும், ஐஎஸ் தீவிரவாதிகளும் அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆப்கன் அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானைத் தலிபான் தீவிரவாதிகள் பிடித்து வைத்துக்கொண்டு பயங்கர கட்டுப்பாடுகள் விதித்தனர். அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளின் அதிரடி நடவடிக்கைகளால் கடந்த 2001-ம் ஆண்டு தலிபான்கள் பிடியில் இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது.

எனினும், ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக ராணுவத்தினர், போலீஸாரை குறிவைத்து தலிபான்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Google+LinkedinYoutube