ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி முதலீடு?- மத்திய அரசு தலையிடாது என நிதியமைச்சக அதிகாரி தகவல்

ஐடிபிஐ வங்கியில் பெரும்பான்மையான பங்குகளை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ( எல்ஐசி) வாங்க திட்டமிட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி தற்போது 10.82 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. மத்திய அரசு வசம் 80.96 சதவீத பங்குகள் உள்ளன. இதில் 40 சதவீத பங்குகளை எல்ஐசி வாங்குவதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இரு நிறுவனங்களிலும் தனித்தனியாக இயக்குநர் குழு இருக்கிறது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழு இதற்கான முடிவை எடுக்கும். மத்திய அரசு இதுபோன்ற விஷயங்களில் தலையிடுவதில்லை என நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதனை தெரிவித்தார்.

இரு நிறுவனங்களுமே மத்திய அரசு நிறுவனம் ஆயிற்றே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், இரு பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையே வர்த்தக ரீதியிலான தொடர்பு இருக்க கூடாதா என்று பதிலளித்தார்.

ஐடிபிஐ வங்கி பங்குகளை வாங்குவதற்கு எந்த நிறுவனமும் முன்வராததால், எல்ஐசியிடம் பங்குகளை வாங்குமாறு மத்திய அரசு கேட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த விஷயம் குறித்து காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் (ஐஆர்டிஏ) மத்திய அரசு ஆலோசித்திருப்பதாகவும் தெரிகிறது.

ஐஆர்டிஏ விதிமுறைகளின் படி எல்ஐசி அல்லது எந்த ஒரு காப்பீட்டு நிறுவனமும் மற்ற நிறுவனங்களின் பங்குகளில் 15 சதவீதத்துக்கு மேல் வைத்துகொள்ள கூடாது என்பது குறிப்பிடத் தக்கது.

Google+ Linkedin Youtube