அணியில் ஒரு வீரரைத் தேர்வு செய்யலாமா கூடாதா என்பதற்காக அல்ல யோ-யோ டெஸ்ட்: யோ-யோவை கண்டுபிடித்தவர் விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தேர்வுக்கு மிகப்பெரிய தகுதியாக யோ-யோ டெஸ்ட் வைக்கப்பட்டுள்ளது குறித்து யோ-யோவை கண்டுபிடித்த டென்மார்க் விளையாட்டு, உடற்தகுதி நிபுணர் டாக்டர் ஜென்ஸ் பேங்ஸ்போ விளக்கமளித்துள்ளார்.

யோ-யோ டெஸ்ட் வேண்டாமென்றால் போங்கள் என்று ரவிசாஸ்திரி கூற மற்றவர்களும் அணித்தேர்வுக்கு அடிப்படைத் தகுதியாக கிரிக்கெட்டில் யோ-யோவைக் கொண்டு வருவது பற்றி கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

 

இது குறித்து டாக்டர் ஜென்ஸ் பேங்ஸ்போ கூறியதாவது:

ஒரு குறிப்பிட்ட விளையாட்டுப் பந்தயத்தில் அந்த குறிப்பிட்ட வீரர் விளையாடக்கூடிய திறன் படைத்தவரா என்பதைச் சோதனை செய்வதே யோ-யோ. ஒரு வீரரை அணியில் தேர்வு செய்யலாமா வேண்டாமா என்பதை நிர்ணையிக்க யோ-யோவை பயன்படுத்தக் கூடாது.

இந்த டெஸ்ட்டை ஒரு முறையான உபகரணமாகப் பயன்படுத்தி ஒரு வீரரை மேலும் ஃபிட் ஆக்கத்தான் யோ-யோ.

இப்படித்தான் கால்பந்து கிளப்புகள் யோ-யோ சோதனையைப் பயன்படுத்துகின்றன. இதைவிடவும் திறமையும் மனரீதியான ஆற்றலும் மிக முக்கியமானவை. ஒரு வீரர் தனக்கு இட்டப் பணியை நிறைவேற்றத் தகுந்த உடற்தகுதியுடன் இருக்கிறா என்ற அடிப்படையை நிர்ணயிக்கலாமே தவிர ஒருவரை அணியில் தேர்வு செய்வது பற்றியோ, தேர்வு செய்யாமல் இருப்பது பற்றியோ யோயோவை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தியா வைத்துள்ள 16.1 என்ற அளவு கோல் கடினமானதல்ல. ஒரு வீரர் இந்த லெவலை எட்டாமல் கூட அணிக்காகச் சிறப்பாக ஆட முடியும். ஒரு குறைந்தபட்ச ஃபிட்னெஸ் அளவு வீரருக்குத் தேவை என்று நினைக்கும் பட்சத்தில் 16.1 ஒன்றும் கடினமானதல்ல.

அதிகமாக உடல்தகுதி கொண்ட கால்பந்தாட்ட வீரர்கள் 20 வரை தொடுவார்கள். அந்தந்த விளையாட்டுக்கு என்ன அளவுகோல் தேவையோ அதற்குத்தக்கவாறு யோ-யோவைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அணித்தேர்வுக்காக இதனைப் பயன்படுத்துவது வித்தியாசமானது. அதாவது நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

இவ்வாறு கூறினார் விளையாட்டு விஞ்ஞானி டாக்டர் ஜென்ஸ் பேங்ஸ்போ.

Google+ Linkedin Youtube