“அடல்ட் படங்களைப் பார்ப்பதற்கும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்” - மஞ்சிமா மோகன் பேட்டி

‘அடல்ட் படங்களைப் பார்ப்பதற்கும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்’ என ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார் மஞ்சிமா மோகன்.

கவுதம் கார்த்திக் ஜோடியாக ‘தேவராட்டம்’ படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் மஞ்சிமா மோகன். முத்தையா இயக்கும் இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மஞ்சிமா மோகனிடம் உரையாடியதில் இருந்து...

         

கவுதம் கார்த்திக் நடித்த அடல்ட் காமெடிப் படங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. கவுதம் கார்த்திக் நடித்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டான படங்கள். ஆனால், இதுவரை இந்த இரண்டு படங்களையுமே நான் பார்க்கவில்லை. ஆனால், நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். மக்களுக்கு இந்தப் படங்கள் பிடித்திருக்கிறது. இதுபோன்ற மாற்றத்தை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ‘இந்த மாதிரிப் படங்களை மட்டும்தான் பார்ப்போம்’ என்று இல்லாமல், எல்லா வகையான படங்களையும் பார்ப்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். நான் இந்தப் படங்களைப் பார்க்காததால், என்னுடைய சொந்தக் கருத்தைத் தெரிவிக்க முடியவில்லை.

பப்ளி கேர்ள் என்பது உங்களுக்கு பிளஸ்ஸா? மைனஸா?

பிளஸ், மைனஸ் இரண்டுமே கிடையாது. சிலருக்கு இது பிடித்திருக்கிறது, சிலருக்குப் பிடிக்கவில்லை. படத்தில் கேரக்டர் என்ன மாதிரி இருக்கிறதோ, அதுபோல் மாற்றிக் கொள்ளலாம். பப்ளியாக இருப்பதால்தான் வாய்ப்புகள் பெரிதாகக் கிடைப்பதில்லை என முன்பு நினைத்தேன். ஆனால், ‘கேரக்டருக்கு ஏற்ற மாதிரி நீங்கள் நடித்தால் போதும்’ என்றுதான் பெரும்பாலான இயக்குநர்கள் சொல்கிறார்கள். ஒல்லியாக இருந்து நடிக்கத் தெரியாவிட்டால் எப்படி? எனவே, திறமை தான் இங்கு முக்கியம் எனப் புரிந்துகொண்டேன். அதேசமயம், கேரக்டருக்குத் தேவை என்றால் எடை குறைக்கவும் நான் தயார். ‘தேவராட்டம்’ படத்துக்காக கொஞ்சம் எடை குறைத்தால் நன்றாக இருக்கும் என இயக்குநரும் தயாரிப்பாளரும் சொன்னார்கள். அதுவும் கமிட்டான பிறகுதான் அதைச் சொன்னார்களே தவிர, அதற்கு முன்பே அவர்கள் டிமாண்ட் பண்ணவில்லை. எனவே, அதற்காக டயட், உடற்பயிற்சி என தீவிரம் காட்டி வருகிறேன். இதற்கு முன் பார்த்த மஞ்சிமாவைவிட, கொஞ்சம் ஸ்லிம்மான மஞ்சிமாவை ‘தேவராட்டம்’ படத்தில் பார்க்கலாம்.

மஞ்சிமாவின் ‘ரொமான்ஸ் ரகசியங்கள்’ பற்றி சொல்லுங்க...

எனக்கு ரொமான்ஸ் எதுவுமே இல்லை. என்னைப் பார்த்தா அப்படியா இருக்கு... (சிரிக்கிறார்). உண்மையை சொல்லப் போனால், எனக்கு அதற்கான நேரமே இல்லை. என்னுடைய கவனம் முழுவதும் இப்போது சினிமாவில் தான் இருக்கிறது. நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும். அப்படி எனக்கு ஏதாவது ரொமான்ஸ் இருந்தால், முதலில் என் அப்பா, அம்மாவுக்குத்தான் முதலில் தெரியும். அதன்பிறகுதான் உங்களுக்குத் தெரியவரும். ‘இவர்தான் உனக்கானவர்’ என உள்மனது சொல்ல வேண்டும். இதுவரைக்கும் யாரைப் பார்த்தும் என்னுடைய உள்மனது அப்படிச் சொல்லவில்லை. சொல்லும்போது பார்த்துக் கொள்ளலாம்.

இன்னொரு விஷயம் சொன்னால், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இதுவரை ஒருவர் கூட நேரடியாக வந்து என்னிடம் காதலைச் சொல்லவில்லை. என் நண்பர்கள் மூலமாகத்தான் தூது விட்டிருக்கிறார்களே தவிர, என்னிடம் நேரடியாகச் சொன்னது இல்லை. அப்படியே சொன்னாலும் உடனே ஏற்றுக் கொள்கிற ஆளும் கிடையாது. பார்த்தவுடன் காதல் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.

கவர்ச்சி காட்டாமல் சினிமாவில் ஹீரோயினாக நிலைத்திருக்க முடியும் என நினைக்கிறீர்களா?

கவர்ச்சிக்கும், உடலைக் காட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. என்னால் உடலைக் காட்டி நடிக்க முடியாது. எனக்கு அது பொருத்தமாக இருக்காது. சேலை கட்டி நடிப்பதில் கூட கவர்ச்சி இருக்கிறது. கேரக்டருக்குத் தேவை என்றால், என்னால் அதைச் செய்ய முடியும். எனவே, இயக்குநர் என்னிடம் கதை சொல்லும்போதே இந்த விஷயங்கள் குறித்து தெளிவாகப் பேசிவிடுவேன்.

கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்தபோது நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?

கவுதம் மிகச்சிறந்த ஆசிரியர் என்பது எல்லாருக்குமே நன்றாகத் தெரியும். ஸ்பாட்டில் ரொம்பவே அமைதியாக, ரிலாக்ஸாக இருப்பார். சின்ன விஷயமாக இருந்தால் கூட எனக்குப் பயமோ, பதட்டமோ இருக்கும். ஆனால், அவருடன் பணியாற்றிய பிறகு, எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் ரிலாக்ஸாக இருக்க கற்றுக் கொண்டேன். நடிப்பு பற்றி குட்டிக் குட்டியாக நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் நான் கேமரா முன்னால் நிற்கும்போது அந்த டிப்ஸ்களை நினைவுபடுத்திக் கொள்வேன்.

நடிகர் ரிஷியும் நீங்களும் காதலிப்பதாக செய்திகள் வெளியானதே...

ரிஷி என்னுடைய நெருங்கிய நண்பன். வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை, உண்மையிலேயே என்னுடைய நல்ல நண்பன். நான் ஒருவருடன் டேட்டிங் போகிறேன் என்றால், குறைந்தபட்சம் அதைப்பற்றி ஒரு புகைப்படமாவது வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் அவர்களாக ஏதாவது கதைகட்டி விடுகிறார்கள்.

Google+ Linkedin Youtube