கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து எங்களை எளிதாக வெளியேற்ற முடியாது: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி

அமெரிக்கா கோரி வருவது போல  எண்ணெய் சந்தையில் இருந்து அவ்வளவு எளிதாக  எங்களை விலக்கி வைக்க முடியாது என்று  ஈரான் கூறியுள்ளது.

இதுகுறித்து ஈரானின் மூத்த எண்ணெய் நிறுவன அதிகாரி கூறும்போது, "அமெரிக்கா கோரி வருவது போல அவ்வளவு எளிதாக சர்வதேச எண்ணெய் சந்தையிலிருந்து எங்களை விலக்கி வைக்க முடியாது. ஈரான் ஒரு நாளைக்கு சுமார் 2.5 மில்லியன் பேரல் எண்ணெய்யை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. எங்களை சர்வதேச சந்தையிலிருந்து சில மாதங்களில்  நீக்கிவிடலாம் என்று நினைப்பது சாத்தியமற்றது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்தது.

2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை பைத்தியக்காரத்தனமானது என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதர தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஈரான்னின் முக்கிய ஏற்றுமதியான கச்சா எண்ணெய் பிற நாடுகள் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube