சென்னையில் பயங்கரம் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தி கொலை: நண்பர்களே கொன்று புதைத்தது அம்பலம்

திருவான்மியூரில் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய நண்பர்கள் அவரை கொன்று செய்யூர் அருகே புதைத்துள்ளனர். மூன்று பேரை பிடித்த போலீஸார் மேலும் மூவரை தேடி வருகின்றனர்.

திருவான்மியூர் கங்கை அம்மன் கோவில் தெருவில் வசித்தவர் கலியமூர்த்தி(55). இவரது மனைவி ஹேமா. கலியமூர்த்தி அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவரது தொழில் பார்ட்னர்களாக சிவம்(எ) பரமசிவம், முத்து, தர்மா, செந்தில் ஆகியோர் இருந்துள்ளனர். நன்றாக போய் கொண்டிருந்த ரியல் எஸ்டேட் தொழிலில் திடீரென முளைத்த எதிரிகளால் கடந்த 16-ம் தேதி கலியமூர்த்தி கடத்தப்பட்டார்.

வீட்டை விட்டு வெளியேச் சென்ற கலியமூர்த்தியை காணவில்லை என அவரது மனைவி ஹேமா திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். கடைசியாக கலியமூர்த்தி திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டர் சிக்னல் அருகே இருந்ததாக அவரது செல்போன் சிக்னல் காட்டியது.

அதை வைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது ஸ்கார்ப்பியோ கார் ஒன்றில் கலையமூர்த்தி வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டு கடத்தப்படுவது தெரிந்தது. இதையடுத்து போலீஸார் கலிய மூர்த்தியின் செல்போன் பதிவுகள், கால் தகவல்களை சேகரித்தனர்.

இதில் கலியமூர்த்தியின் தொழில் பார்ட்டனர்கள் முத்து, மணிகண்டன் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர்களை பிடித்து விசாரித்தபோது கலியமூர்த்தி குறித்து திடுக்கிடும் தகவல்களை அவர்கள் தெரிவித்தனர். மேலும் ஓட்டுநர் குமாரவேலையும் போலீஸார் பிடித்தனர்.

கலியமூர்த்தியை தாங்கள் கடத்தி கொன்றுவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கூறிய தகவல் அதிர்ச்சியூட்டும் விதமாக இருந்துள்ளது. கலியமூர்த்திக்கும் பார்ட்னர்களான சிவம், முத்து, மணிகண்டன், செந்தில், தர்மா ஆகியோருக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது.

இதனால் கலியமூர்த்தி மீது அவர்கள் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். கலியமூர்த்தி சரியாக பதிலளிக்காததால் கலியமூர்த்தியை தங்கள் இடத்துக்கு கடத்தி கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கலியமூர்த்திக்கு சந்தேகம் வராதபடி திருவான்மியூர் சிக்னல் அருகே வரும்படி கூறியுள்ளனர்.

அங்கு வந்த கலியமூர்த்தியை செந்திலுக்கு சொந்தமான ஸ்கார்பியோ காரில் கடத்தியுள்ளனர். காரை ஓட்டுநர் குமாரவேல் ஓட்டியுள்ளார். கலியமூர்த்தியை கடத்திய கும்பல் அவரை தாக்கி, பெல்டால் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளனர். பின்னர் அவரது பிணத்தை ஈசிஆர் ஆலையில் உள்ள செய்யூர் அருகில் உள்ள ஓதியூர் பகுதியில் புதைத்துள்ளனர்.

பின்னர் எதுவுமே நடக்காதது போல் அனைவரும் கிளம்பிச்சென்றுள்ளனர். ஆனால் போலீஸ் விசாரணையில் முத்து, சிவம், மணிகண்டன் உள்ளிட்ட மூவரை பிடித்த போலீஸார் அவர்களை தற்போது கலியமூர்த்தி புதைக்கப்பட்டுள்ள செய்யூர் அருகில் உள்ள ஒதியூருக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் மணிகண்டனை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர். இதையடுத்து அவர் உடலை தோண்டும் பணி நடக்கிறது. பத்து நாட்கள் ஆன நிலையில் அழுகிய நிலையில் இருக்கும் உடலை அடையாளம் காட்ட அவரது உறவினர்களை போலீஸார் அழைத்துச்சென்றுள்ளனர்.

மேலும் தலைமறைவாக இருக்கும் சிவம்(எ) பரமசிவம், தர்மா, செந்தில் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னையில் பரபரப்பான சாலையில் தொழிலதிபர் ஒருவர் காரில் நண்பர்களாலேயே கடத்தப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google+LinkedinYoutube