ஜிஎஸ்டி வரம்புக்குள் எரிவாயு, விமான எரிபொருள்?

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தி ஓர் ஆண்டு முடிவடையப் போகிறது. இந்த நிலையில் இயற்கை எரிவாயு மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றை எளிதாக ஜிஎஸ்டி வரம்புக்குள் இணைக்க முடியும் என நிதிச்செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த முடிவினை ஜிஎஸ்டி கவுன்சில்தான் எடுக்க வேண்டும். கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஜூலை 21-ம் தேதி நடக்க இருக்கிறது. ஆனால் அந்த கூட்டத்தில் இவை விவாதிக்கப்பட இருக்கிறதா என்பதை கூற மறுத்துவிட்டார்.

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. மத்திய மாநில அரசுகளுக்கு கணிசமான வருமானத்தை இவை வழங்குவதால் ஜிஎஸ்டி வரம்புக்குள் இவற்றை கொண்டு வர அரசுகள் விரும்பவில்லை.

ஜிஎஸ்டியின் அதிகபட்ச வரி விகிதம் 28 சதவீதமாகும். பெட்ரோல் மற்றும் டீசலில் மத்திய அரசின் உற்பத்தி வரி மற்றும் மாநில அரசுகளின் வாட் வரி ஆகியவை இணையும் போது 28 சதவீதத்துக்கு மேல் வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இயற்கை எரிவாயு மற்றும் விமான எரிபொருளை தற்போதைய ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் இணைக்க முடியும்.

பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டிக்கு வெளியே இருக்கிறது என்பதை அரசு உணர்ந்திருக்கிறது. சரியான சமயத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் தன்னுடைய முடிவினை எடுக்கும்.

இவற்றை குறித்து விவாதிக்க வேண்டுமா என்பதை ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் இவற்றை எளிதாக ஜிஎஸ்டிக்குள் இணைக்க முடியும் என ஆதியா கூறினார்.

Google+ Linkedin Youtube