எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

நடிகர் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படமாக இருக்கிறது.

‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐக். எம்.ஆர்.ராதாவின் பேரன் இவர். இந்தப் படத்தில் ஜீவா, சூரி, ஸ்ரீதிவ்யா, ராதாரவி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, இளவரசு, கோவை சரளா எனப் பலர் நடித்தனர். ஹாரர் காமெடிப் படமான இது, கடந்த வருடம் மே மாதம் வெளியானது.

இந்நிலையில், அடுத்ததாக தன்னுடைய தாத்தா எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார் ஐக். “அவரைப் பார்க்காதவர்கள் கூட அவரை மறந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்காகத்தான் இது. என்னுடைய தாத்தா ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா பற்றி சொல்லப்படாத கதையைப் படமாக எடுக்கப் போகிறேன். பேரனாக மட்டுமின்றி, ஒரு ரசிகனாகவும் இந்தப் படத்தை உண்மையாக எடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார் ஐக்.

நாடக நடிகராக இருந்து சினிமாவில் நடித்தவர் எம்.ஆர்.ராதா. பழமைவாதம் ஊறிப் போயிருந்த காலகட்டத்தில், சினிமா வழியே முற்போக்கு கருத்துகளை விதைத்தவர். இன்றைக்கும் அவருடைய பல வசனங்கள் மேற்கோளாகவும், வாழ்க்கைத் தத்துவமாகவும் கையாளப்பட்டு வருகின்றன.

Google+ Linkedin Youtube