தற்கொலைப்படைத் தாக்குதலுக்குக் குழந்தைகளை பயன்படுத்தும் பாகிஸ்தான்: ஐக்கிய நாடுகள் அதிர்ச்சி

தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் மதரஸாக்களில் உள்ள குழந்தைகளை பயன்படுத்துகிறார்கள்,அவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் அவை அதிர்ச்சி தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் தீவிரவாத தாக்குதல்கள், ஆயுதம் ஏந்தியப் போராட்டம் ஆகியவற்றால் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

   

ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் மற்றும் ஆயுதப்போராட்டம் குறித்த அறிக்கையை இன்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளான தெஹரிக் இ தலிபான் உள்ளிட்ட சில அமைப்புகள் குழந்தைகளையும், சிறுமிகளையும் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்துகின்றன. அவர்களை தற்கொலைப் படையாக மாற்ற, தேவையான மூளைச்சலவையும் செய்கின்றன. இதற்காக மதரஸாக்களில் இருந்து குழந்தைகளை பயிற்சிக்கு எடுக்கின்றனர்.

சமீபத்தில் கிடைத்த வீடியோவில் தீவிரவாத குழுக்கள் குழந்தைகளுக்கு அளிக்கும் பயிற்சி குறித்தும், தற்கொலைப்படைத் தாக்குதல் எவ்வாறு நடத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கை எங்களுக்குக கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ் கூறுகையில், குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்கள் மீது தொடர்ந்து ஆயுத்தாக்குதல், வெடிகுண்டு தாக்குதல் நடப்பது வேதனை அளிக்கிறது. குறிப்பாகப் பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் மீது தாக்குதல் நடத்துவது துயரமாகும்.

பாகிஸ்தான் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து பள்ளிக்கூடங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். வயதுவாரியாகத் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியானவர்கள், காயமடைந்தவர்களைப் பட்டியலிட்டால், தாக்குதலில் பலியானவர்களும், காயமடைந்தவர்களும் மற்ற வயதினரைக்காட்டிலும் அதிகமாகும்.

ஷேவான், சிந்து மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 75 பேர் கொல்லப்பட்டனர். இதில் 20 பேர் குழந்தைகள் ஆவர். மேலும், 8 பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, அதில் 4 பள்ளிகள் பெண் குழந்தைகள் படிப்பதாகும் எனத் தெரிவித்தார்.

கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் குழந்தைகள் உரிமை மீது 21 ஆயிரம் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும், தீவிரவாத தாக்குதல்கள், ஆயுதம் ஏந்திர போராட்டங்களால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏமனில் நடந்து வரும் கிளர்ச்சியால், ஏறக்குறைய 1300 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகள் உரிமை மீது கடந்த ஆண்டு 21 ஆயிரம் மீறல்கள் நடந்துள்ளன. ஈராக், மியான்மர், மத்திய ஆப்பிரி்க்கா, காங்கோ, தெற்கு சூடான், சிரியா, ஏமென் ஆகிய நாடுகளில் குழந்தைகள் அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

Google+ Linkedin Youtube