‘சுவிஸ் வங்கியில் கறுப்புப்பணமே இல்லையா?, வெள்ளையாக மாறிவிட்டதா?’: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள அனைத்து கறுப்புப்பணத்தையும் மீட்பேன் என்று உறுதியளித்த பிரதமர் மோடி அரசு, இன்று கறுப்புப்பணம் இல்லை என்று நிலையைமாற்றிக் கூறுவது எப்படி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள கறுப்புப்பணம் முழுவதையும் மீட்டு இந்தியா கொண்டுவருவேன். ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி பேசியிருந்தார்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருந்த பணத்தின் அளவு குறைந்திருந்தநிலையில், கடந்த ஆண்டு 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பிரதமர் மோடிக்குக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

நாட்டின் தற்காலிக நிதி அமைச்சர் பியூஷ் சாவ்லா நேற்று அளித்த பேட்டியில், சுவிட்சர்லந்து தேசிய வங்கியில் இந்தியர்களின் டெபாசிட்கள் கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

கறுப்புப்பணத்தை ஒழித்துவிடுவேன் என்று கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசின் நிலைப்பாடு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி, சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்கள் சட்டவிரோதமாக செய்த டெபாசிட்கள் அனைத்தையும் இந்தியாவுக்குக் கொண்டுவருவதாகவும், ஒவ்வொரு இந்தியரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாகவும் உறுதியளித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டில், பணமதிப்புநீக்கம் நடவடிக்கையைக் கொண்டு வந்து, உள்நாட்டில் கறுப்புப்பணத்தை கட்டுப்படுத்தப் போகிறேன் என்றார்.

2018-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் 50 சதவீதம் உயர்ந்துவிட்டதாக தெரிவிக்கிறார். அப்படியென்றால் சுவிட்சர்லாந்து வங்கியில் கறுப்புப்பணம் பணம் இல்லை, வெள்ளையாக மாறிவிட்டதா

இவ்வாறு ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Google+ Linkedin Youtube