பூமிக்கடியில் கச்சா எண்ணெய் சேமிப்பு; அவசரகால தேவைக்கு பயன்படுத்த திட்டம்: வேகம் காட்டும் மத்திய அரசு

போர் போன்ற அவசர காலங்களில், திடீர் தேவை ஏற்பட்டாலோ, கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நிறுவனங்கள் நிறுத்தக்கொண்டாலோ அவசர தேவைக்கு பல லட்சம் டன்கள் கச்சா எண்ணெயை பூமிக்கடியில் சேமித்து வைக்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த 1990-ம் ஆண்டு வளைகுடா போர் நடந்தது.. அப்போது, இந்தியாவின் கைவசம் இருந்த பெட்ரோலிய பொருட்கள், 3 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் பெரும் இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் இதுபோன்ற சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க அந்த நாடுகள் சில ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

சுரங்கம் தோண்டி குகை போன்ற அமைப்பில் கச்சா எண்ணெய் சேமித்து வைக்கப்படுகிறது. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் இதுபோன்று சுமார் மூன்று மாதங்களுக்கு தேவையான கச்சா எண்ணெயை சேமித்து வைத்துள்ளன. திடீரென நெருக்கடி ஏற்பட்டால் இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். எந்தவித நெருக்கடிக்கும் ஆளாக தேவையில்லை. அவசர காலத் தேவையை சமாளிக்க முடியும்.

எனவே இந்தியாவும் இதுபோன்ற முன்னேற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளது. அதன்படி, 4 ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவில், தென்னிந்தியாவில் 3 பெட்ரோலிய பொருள் சேமிப்பு நிலையங்களை அமைக்கப்பட்டு வருகின்றன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், கர்நாடக மாநிலம் மங்களூரு, படூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

தரையில் சுரங்கம் தோண்டி, பல லட்சம் டன்கள் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன. விசாகபட்டினம், மங்களூருவில் மொத்தம் 53 லட்சத்து 30 ஆயிரம் டன் கச்சா எண்ணெயை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 நாட்களுக்கான தேவையான பெட்ரோலிய பொருள் நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதைத் தொடர்ந்து, மேலும் சில அவசர கால பெட்ரோலிய பொருட்கள் சேமிப்பு மையங்களை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ஒடிசா மாநிலம் சந்திக்கோல் உள்ளிட்ட இடங்களில் புதிய பெட்ரோலிய சேமிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. சந்திக்கோலில் அமையும் மையத்தில் மட்டும் 44 லட்சம் டன் கச்சா எண்ணெயை சேமித்து வைக்கும் அளவிற்கு பிரமாண்ட முறையில் அமைக்கப்பட உள்ளது.

மேலும் படூரில் அமையும் நிலையத்தில், 25 லட்சம் டன் கச்சா எண்ணெயை சேமித்து வைக்க முடியும். இவற்றின்மூலம் மொத்தம் 69 லட்சம் டன் கச்சா எண்ணெயை சேமித்து வைக்கலாம். இதன் மூலம் மேலும் 12 நாட்களுக்கான பெட்ரோலிய பொருட்களின் தேவையை பூர்த்தி செய்ய வாய்ப்புள்ளது.

Google+ Linkedin Youtube