பிக் பாஸ் 2: நாள் 11- வேலைக்காரர்களான எஜமானர்கள்

பிக் பாஸுக்கு எதிரான மும்தாஜின் போராட்டத்தின் நேற்றைய நிகழ்ச்சி ஆட்டம் பாட்டத்துடன் முடிந்தது.

இரவு ஆண்கள் அறையில் மஹத்தை அழைத்த அனந்த் ”நாம் இந்த வீட்டுக்கு கேம் ஆடுவதற்க்கு மட்டும் வரவில்லை. நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ளவே வந்துள்ளோம். 20 வருடம் முன்பு டிபி நோய் வந்து படுக்கையில் இருந்தேன். பாத்ரூம் கூட போகமுடியாது. அப்போது என் உதவியாளர் தான் என்னை பார்த்துக் கொண்டார். அவரை எப்போதும் நான் வேலைக்காரி என்று அழைத்தது கிடையாது. அவர் என் தாய். நாம் இங்கே நடந்து கொள்வதன் மூலம் மக்களுக்கு தவறான எண்ணம் வந்துவிடக்கூடாது” என்று கூறினார்.

அதை கேட்ட மஹத் அருகில் இருந்து ஐஸ்வர்யாவிடம் “எங்களுக்கு வேலை செய்வதை டாஸ்க்காக நெனச்சு பண்றியா? இல்ல சீரியசா நெனச்சு பண்றியா?” என்று கேட்டார். அதற்கு ஐஸ்வர்யா “டாஸ்க் காக தான் பண்றேன்” என்று கூறவும் உடனே மஹத் அனந்தை நோக்கி “இங்க எல்லாருமே டாஸ்க் காக தான் பண்றாங்க சார் நாளைக்கு எனக்கு இந்த நிலைமை வந்தாலும் நானும் செய்வேன்” என்று கூறி அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.

இந்த சென்றாயன் கொஞ்சம் சும்மா இருந்தாலே பாலாஜியும் நித்யாவும் சேர்ந்து விடுவார்கள் போல. மனுஷன் ஒவ்வொரு முறையும் சமாதானம் செய்கிறேன் என்ற பெயரில் இருவரையும் அருகருகே வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்ததும் சண்டை வந்து விடுகிறது.

அதன்படி இன்றும் பாலாஜியையும் நித்யாவையும் அழைத்து பேச முயற்சிக்க அதற்கு நித்யா “அதெல்லாம் சரிப்பட்டு வராது. எதையும் என்னால் மறக்க இயலாது. ஃப்ரெண்ட்ஸ்னா ஃப்ரெண்ட்ஸ்தான்” என்று சொல்லிவிட்டு கிளம்பவும் வழக்கம் போல பாலாஜி தன் கெட்ட வார்த்தை அர்ச்சைனையை தொடங்கி விட்டார்.

நல்லவேளை அதையெல்லாம் மியூட் செய்து விடுகிறார்கள். போன சீசனில் “ஹேர்” என்று ஒரே ஒரு வார்த்தை சொன்னதற்கு காயத்ரிக்கு 8 பக்க வகுப்பெடுத்தார் ஆண்டவர் என்பது வரலாறு. இதில் பாலாஜி 5 வினாடியில் 6 கெட்டவார்த்தை பேசி விடுகிறார்.

கிச்சனில் நின்று கொண்டிருந்த மும்தாஜ் பாலாஜியை அழைத்து ”நித்யா இன்னைக்கு நல்ல மூட்ல இருந்தாங்க. ஏன் இப்படி பண்றீங்க” என்று கேட்டதும் “சாவட்டும் மேடம்.. இவள் எப்படி குழந்தையை விட்டுவிட்டு இங்கே வரலாம். எல்லாம் நடிப்பு மேடம்” என்று பேசிக் கொண்டிருக்கும்போதே விளக்குகள் அணைக்கப்பட்டன.

மறுநாள் காலையில் டேனியலிடம் அனந்த் ‘மஹத் நல்லப் பையன் தான் ஆனா அவனுக்கு புரிய மாட்டேங்குது. எல்லாத்தையும் ஃபன் என்று நினைத்துக் கொள்கிறான்” என்று பேசிக்கொண்டிருக்கும்போதே மஹத் வேகமாக ஓடி வந்து ‘மச்சான் சீக்கிரம் வா” என்று டேனியலை வெளியே அழைத்தார். டேனியல் வெளியே வந்ததும் “என்ன அந்த ஆள் சும்மா மொக்க போட்டுட்டு இருக்காரு” என்று கூறினார்.

அறையில் வேகவேகமாக அயர்ன் செய்து கொண்டிருந்தார் பாலாஜி. அருகே நின்ற நித்யா “கொடுங்க நான் பண்றேன். நீங்க தான என்னை செலெக்ட் பண்ணுனீங்க? என்று கேட்டார். அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை. நானே பார்த்துக் கொள்கிறேன் என்று விரட்டினார் பாலாஜி. வெளியே அழுது கொண்டிருந்த நித்யாவிற்கு ஆதரவாக பேச வந்த டேனியலிடம் “நீங்க போங்க தம்பி. எங்களுக்கு தெரியும்” என்று முகத்தில் அடித்தாற்போல் பேசினார் பாலாஜி.

ஆனாலும் அதை மனதில் வைத்துக் கொள்ளாத டேனியல் பாலாஜியிடம் சென்று “உங்க குழந்தை உங்களை டிவில் பார்த்துக் கொண்டிருக்கிறது” அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

பின்னர் அனைவரையும் ஒன்றாக அமரவைத்த பிக் பாஸ் ஒரு அறிவிப்பை செய்தார் இந்த வீட்டின் சிறந்த எஜமானர் யார் என்பதையும் சரியாக வேலை செய்யாத உதவியாளர் யார் என்பதையும் எஜமானர்கள் தேர்வு செய்து அறிவிக்க வேண்டும். அதன்படி சரியாக வேலை செய்யாத உதவியாளர் நித்யா. சிறந்த எஜமானர் டேனியல் என்று முடிவு செய்து அறிவித்தனர்.

பின்னர் டேனியலை அழைத்த பிக்பாஸ் இன்னொரு அறிவிப்பையும் அவர் மூலம் வெளியிட்டார். அது இன்றோடு இந்த டாஸ்க் முடிவதாகவும் இப்போதிலிருந்து பெண்கள் இந்த வீட்டின் எஜமானர்கள் என்றும் ஆண்கள் அவர்களுக்கு உதவியாளர்கலாகவும் இருக்க வேண்டும் என்பதே அது. அறிவிப்பை கேட்டதும் பெண்களுக்கு ஒரே குஷி.

இப்போதும் பெண்கள் அனைவரும் எஜமானர்கள். ஆண்கள் வேலைக்காரர்கள். இதில் அதிக குஷியில் இருப்பது நித்யாதான் போல. ஆரம்பத்திலேயே ஆரம்பித்து விட்டார். பாலாஜியை அழைத்து “தம்பி இந்த துணியெல்லாம் எடுத்துட்டு போய் சாயம் போகாம துவைச்சிட்டு வாங்க” என்று சொன்னார்.

அதற்கு பாலாஜி போகிற போக்கில் “இங்க உன் சாயமே வெளுக்குது” என்று சொன்னது செம நோஸ் கட்.

ஆனாலும் விடாத நித்யா ஒரு மூட்டை துணிகளை கொடுத்து அயர்ன் செய்ய சொன்னார். கோபத்துடன் அயர்ன் செய்து கொண்டிருந்த பாலாஜியை சமாதானம் செய்ய முயன்ற ரித்விகாவிடம் “உங்க அண்ணன் தம்பிக்கு இப்படி நடந்தால் அப்போது சொல்லுங்கள் இப்படி” என்று கூறினார். பேசிக் கொண்டே நித்யாவின் துணியை பொசுக்கி விட்டார்.

அடுத்ததாக மாம்பழம் வேண்டும் என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம்  மாம்பழம் எத்தனை இருக்கிறது என்று பார்த்து விட்டு கொடுங்கள் என்று வைஷ்ணவி சொல்லவும் கோபித்து கொண்டு எனக்கு எதுவுமே வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார் ஐஸ்வர்யா (பழத்துக்கு ஒரு சண்டையா).

மீண்டும் முட்டிக் கொண்டது பாலாஜிக்கும் நித்யாவுக்கும். ஷாரிக் பெருக்கிக் கொண்டு இருக்கும்போது தான் அந்த பக்கம் சென்றதால் பாலாஜி மீண்டும் கெட்ட வார்த்தை உபயோகிப்பதாக பிக் பாஸிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார் நித்யா.

இப்படி சிறுக சிறுக வந்து கொண்டிருந்த பாலாஜி நித்யா பிரச்சினை நிகழ்ச்சி முழுவதையும் ஆக்கிரமித்து விட்டிருந்தது. வந்ததிலிருந்து மற்ற போட்டியளரைப் போல என்னையும் பார் என்று நித்யாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாலாஜி. ஆனால் மற்ற போட்டியாளர்களிடம் ஒழுங்காக நடந்து கொள்லம் அவர் நித்யாவிடம் மட்டும் எரிந்து விழுவதும் கொச்சையாக பேசுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.(இருக்கு இந்த வாரம் குறும்படம் இருக்கு)

ஆண்கள் எஜமானர்களாக இருந்தபோது பெண்கள் எந்த சுணக்கமும் காட்டாமல் வேலை செய்தைதை போல ஆண்களால் செய்ய முடியவில்லை. சிறிது நேரம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் வைஷ்ணவியிடம் எரிந்து விழுந்தனர் பாலஜியும் டேனியலும். அப்போ உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம் அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

இறுதியாக நேற்று போலவே இன்று ஆண்களுக்கும் தங்கள் எஜமானர்களை மகிழ்விக்கும் வாய்ப்பை வழங்கினார் பிக்பாஸ். அதன்படி டேனியலும் பாலாஜியும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆடுகளம் படத்தின் ஒத்த சொல்லால பாடலுக்கு பொன்னம்பலமும், டண்டண்டனக்கா பாடலுக்கு சென்றாயனும், வேர் இஸ் த பார்ட்டி பாடலுக்கு மஹத்,ஷாரிக், அனந்தும் ஆடினர்.

வீட்டில் உள்ள மற்றவர்களை போல் பாலாஜி நடித்துக் காட்டினார். பின்னர் சிறப்பாக ஆடியவர்களுக்கு பரிசுகலை வீட்டின் தலைவி நித்யா அறிவித்தார்.

ஆனந்த கண்ணீரோடும் நெகிழ்ச்சியோடும் தொடங்கிய இந்த வாரம் கடும் சண்டைகளோடும் கண்ணீரோடும் முடிந்திருக்கிறது. பார்க்கலாம் நாளை எத்தனை குறும்படங்களை கமல் போட்டுக் காட்டுகிறார் என்று.

Google+ Linkedin Youtube