நீரவ் மோடிக்கு எதிராக பிடி இறுகுகிறது: ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்தது இன்டர்போல்

பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடியில் பிரதான குற்றவாளியாகக் கருதப்படும் வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது சகோதரர் மற்றும் அவரது நிறுவன தலைமை நிர்வாகி ஆகியோருக்கு எதிராக இன்டர்போல், தேடப்படும் குற்றவாளியாக ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீரவ் மோடிக்கு சொந்தமான 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவரது பாஸ்போர்ட்டுகளும் முடக்கப்பட்டன.

ஆனால், இந்த மோசடி வெளியுலகுக்கு தெரிய வருவதற்கு முன்பாகவே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்ட நீரவ் மோடி, முதலில் அமெரிக்காவில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர் தஞ்சம் அளிக்க கோரி இங்கிலாந்து அரசிடம் விண்ணப்பித்தார். இதனால் லண்டனில் தங்கிருப்பது தெரிய வந்தது.

இங்கிலாந்து அரசை தொடர்பு கொண்டு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டது. இதையடுத்து வெவ்வேறு பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி அவர் பல நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார். இதைத்தொடர்ந்து, நீரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ், அதாவது தேடப்படும் சர்வதேச குற்றவாளியாக அறிவித்து நோட்டீஸ் வெளியிடுமாறு, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியன இன்டர்போலுக்கு கடிதம் எழுதியது.

இந்நிலையில், நீரவ் மோடியை பிடிக்க இன்டர்போல் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. நீரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால் மோடி, நிறுவன தலைமை நிர்வாகி சுபாஷ் பராப் ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை இண்டர்போல் பிறப்பித்துள்ளது.

சர்வதேச குற்றவாளியாக அறிவித்து நோட்டீஸ் வெளியிட்டுள்ளதால், நீரவ் மோடி தற்போது மறைந்து உள்ள நாட்டிலிருந்து வேறு எங்கும் அவர் தப்பிச் செல்ல முடியாது. அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கு அவரது புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை இன்டர்போல் அனுப்பியுள்ளது. நீரவ் மோடி உள்ளிட்ட 3 பேரின் இருப்பிடம் தெரிந்தால் அவர்களை கைது செய்யும்படி 192 உறுப்பு நாடுகளிடமும் இன்டர்போல் கூறி உள்ளது. எனவே நிரவ் மோடி எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

இதனிடையே இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நீரவ் மோடி தங்கியிருந்தால் அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நோட்டீஸ் அனுப்ப மும்பை நீதிமன்றத்தில் அனுமதி கோரி அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.

Google+ Linkedin Youtube