வங்கிக் கடனுக்காக காத்திருக்கும் முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம்; முதல்வர் அறிவித்து ஓராண்டாகியும் தொடங்காதது ஏன்?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து ஒராண்டு நெருங்கிவிட்ட நிலையில் மதுரைக்கான முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் இன்னும் தொடங்கவில்லை. வங்கிக் கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் இந்தத் திட்டம் கிடப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மதுரை மாநகராட்சியில் மக்கள் தொகை 20 லட்சத்தை நெருங்கிவிட்டது. விரைவில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை, அதன் அருகே துணைக்கோள் நகரமும் வருகிறது. அதனால், இன்னும் 10 ஆண்டுகளில் மக்கள் தொகையும், குடியிருப்புகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். சுற்றுலாவும், தொழில்துறையும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறக்கூடிய வாய்ப்புள்ளது.

தற்போது மாநகராட்சி மக்களுடைய குடிநீர் தேவை வைகை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்களை கொண்டு சமாளிக்கப்படுகிறது. தற்போது இந்த குடிநீர் திட்டங்களில் போதிய நீர் ஆதாரம் இல்லாததால் மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நிரந்தரமாகிவிட்டது. அதனால், மதுரை மாநகர் பகுதிகளுக்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து, தமிழகத்திற்கு தண்ணீர் வெளியேறும் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் இருந்து நேரடியாக குடிநீர் கொண்டு வருவதற்காக ரூ.1,020 கோடி மதிப்பிலான பெரியார் கூட்டுகுடிநீர் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மதுரை குடிநீருக்காக பெரியார் கூட்டுக்குடிநீர் திட்டத்தை முதல்வர் முக்கியமான திட்டமாக அறிவித்ததால் இந்தத் திட்டம் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வர் அறிவித்து ஒராண்டு நெருங்கிவிட்ட நிலையில் இந்தத் திட்டம் இன்னும் டெண்டர் விடப்படாமல் முடங்கிப்போய் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் வடகிழக்குப் பருவமழை, தென்மேற்கு பருவமழை பெய்யும். தென்மேற்கு பருவமழை மதுரைக்கு பெரியளவில் கைகொடுக்காது. காவிரி நீர் ஆதாரமும் உயராது. அதனால், குடிநீருக்காக மதுரை மாநகராட்சி வைகை அணை குடிநீரை மட்டுமே மதுரை நம்பியிருக்க வேண்டி உள்ளது.

தென்மேற்கு பருவமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். வடகிழக்கு பருவமழையும் அந்த அணைக்கு ஒரளவு கைகொடுக்கும். அதனால், முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினால் மதுரை மாநகராட்சி மற்றும் புறநகர் மாவட்டப் பகுதிகளுக்கு எதிர்காலத்தில் குடிநீர் பிரச்சினை வர வாய்ப்பில்லை. ஆனால், மிக அவசியமான, அவசரமான இந்த குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இந்தத் திட்டத்தில் 125 மில்லியன் லிட்டர் தண்ணீர் கூடலூர் லோயர்கேம்பில் இருந்து 158 கிமீ தூரம் குழாய்கள் மூலம் மதுரைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கான ஆய்வுகள் முடிவு பெற்றுவிட்டது. தற்போது திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, அதற்கான அனுமதிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தக் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மொத்த மதிப்பு 1,020 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அம்ருத் திட்டத்தின்கீழ் நிறைவேற்றப்படுகிறது. மத்திய அரசு 50 சதவீதம் மானியம் வழங்குகிறது. மாநில அரசு 20 சதவீதமும், மாநகராட்சி 30 சதவீதம் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கான நிதி 530 கோடி ரூபாய் ஏசியன் டெவெலப்மெண்ட் வங்கியில் கடனாகப் பெறுவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இந்த கடனைப் பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்தத் திட்டம் சிறிது தாமதமாகி உள்ளது. இன்னும் 10 நாளில் அதற்கான அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு டெண்டர் விட்டு பணிகள் துரிதமாக தொடங்கிவிடும்,”என்றார்.

Google+ Linkedin Youtube