ஆதார் எண்ணுக்கு பதிலாக 16 இலக்க வெர்ச்சுவல் ஐடி: யுஐடிஏஐ அறிமுகம்

வாடிக்கையாளர் தகவல்களைச் சரிபார்க்க (இ-கேஒய்சி) தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதார் எண்ணை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு ஆதார் எண்ணைத் தர விருப்பமில்லாதவர்கள் அதற்கு மாற்றாக 16 இலக்க எண் ஒன்றை பயன்படுத்தும் வெர்ச்சுவல் ஐடி (விஐடி) முறையை யுஐடிஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்றிலிருந்து இந்த முறை அமலுக்கு வந்துள்ளது. தற்பொழுது இந்த முறை தொடக்க கட்டத்தில் இருப்பதாகவும், வங்கிகள் மற்றும் பிற சேவை வழங்குநர்கள் இந்த முறைக்கு தயாரான பின்பு ஆகஸ்ட் 31-க்குப் பிறகு முழுமையான பயன்பாட்டுக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெர்ச்சுவல் ஐடி என்பது திரும்ப உருவாக்கும் வகையிலான 16 இலக்க தற்காலிக எண் ஆகும். ஆதார் எண் கொடுக்கப்படவேண்டிய இடங்களில் ஆதார் எண்ணுக்கு மாற்றாக இதனைப் பயன்படுத்தலாம். யுஐடிஏஐ இணையதளம் அல்லது மொபைல் செயலியில் இந்த வெர்ச்சுவல் ஐடியை உருவாக்கலாம். ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை பயன்படுத்தத்தக்க கடவுச்சொல் (ஓடிபி) போன்றவற்றை யுஐடிஏஐ இணையதளம் அல்லது செயலியில் உள்ளிடுவதன்மூலம் வெர்ச்சுவல் ஐடியை பெறலாம். தினமும் ஒருமுறை மட்டுமே வெர்ச்சுவல் ஐடியை உருவாக்க முடியும். இந்த வெர்ச்சுவல் ஐடி காலாவதி ஆகக்கூடியதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

தனது வெர்ச்சுவல் ஐடியை வாடிக்கையாளர் பகிர்ந்ததும் அவரது ஆதாருக்கென ஒதுக்கப்பட்டுள்ள தனித்த எண் (யுஐடி டோக்கன்) சேவை நிறுவனங்களிடம் சென்றுவிடும். இந்த முறையில் ஆதார் எண்ணை சேவை நிறுவனங்களால் அணுகமுடியாது. ஆதாரிலுள்ள அனைத்து தகவல்களையும் பகிராமல், குறிப்பிட்ட தகவல்களை மட்டும் சேவை நிறுவனங்களுடன் பகிரும் வகையில் யுஐடிஏஐ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் வங்கிகள், வருமான வரித் துறை போன்ற அமைப்புகளுக்கு ஆதாரிலுள்ள அனைத்து தகவல்களும் அனுப்பப்படும். தொலைத் தொடர்பு மற்றும் இ-வாலட் நிறுவனங்களுக்கு பெயர், முகவரி, புகைப்படம் போன்ற குறிப்பிட்ட சில தகவல்கள் மட்டுமே அனுப்பப்படும்.

தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை கொண்டு தகவல்களைச் சரிபார்க்கும் முறையையும் யுஐடிஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும். வெர்ச்சுவல் ஐடி முறைக்கு தயாராகாத சேவை நிறுவனங்களுக்கு கால அவகாசம் அளிக்கவும் யுஐடிஏஐ திட்டமிட்டுள்ளது. இந்த முறைக்கு மாறாத சேவை நிறுவனங்களிடமிருந்து ஒரு பரிவர்த்தனைக்கு 20 பைசா வசூலிக்க யுஐடிஏஐ முடிவு செய்துள்ளது. ஜூலை 31-க்குள் நிறுவனங்கள் வெர்ச்சுவல் ஐடி முறைக்கு மாறிவிட்டால் இந்தத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுவிடும். வங்கிகள் இந்த முறைக்கு மாற ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube