ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங்குக்கு இடம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், அணியின் ‘சுவர்’ என்று செல்லமாக  அழைக்கப்படும் ராகுல் டிராவிட், ஆஸ்திரலேய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோர் ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

‘ஹால் ஆஃப் பேம்’ என்பது கிரிக்கெட்டில் வீரர்கள் செய்த சாதனை, பங்களிப்பு ஆகியவற்றுக்காக ஐசிசி வழங்கும் பட்டமாகும்.

   

இவர்கள் இருவரையும் தவிர்த்து இங்கிலாந்து மகளிர் அணியின் விக்கெட் கீப்பரும், ஓய்வு பெற்ற வீராங்கனையுமான கிளையர் டெய்லரும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் சேர்க்கப்பட்ட 5-வது இந்திய அணி வீரர் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குமுன், பிஷன் சிங் பேடி(2009), கபில் தேவ்(2009), சுனில் கவாஸ்கர்(2009), அனில் கும்ப்ளே(2015) ஆகியோர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர்.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை, ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இடம் பெறும் 25-வது ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ராகுல் டிராவிட் கூறுகையில், ’’ஐசிசி அமைப்பு எனக்கு ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இடம் அளித்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. கிரிக்கெட்டில் மிகச்சிறந்த சாதனையாளர்களுடன் என்னுடைய பெயரும் இடம் பெற்றிருப்பது தலைமுறைகளுக்கும் கடந்து நிற்கும். எந்த ஒருவருக்கும் இந்தப் பட்டம் மிகப்பெரிய பெருமையாகும். இந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த வீரர்கள், அன்பானவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக உதவிய பயிற்சியாளர்கள், அதிகாரிகள், வீரர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு ஆதரவு அளித்த கர்நாடக கிரிக்கெட் அமைப்பு, பிசிசிஐ அமைப்புக்கும் நன்றி’’ எனத் தெரிவித்தார்.

164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் டிராவிட் 13,288 ரன்களையும், 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்து 889 ரன்களையும் குவித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங் கூறுகையில், ’’ஐசிசி அளித்துள்ள கவுரவத்தால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒரு வீரராக ஒவ்வொரு நிமிடத்தை அனுபவித்தேன். அணி குறித்தும், தனிநபர் சாதனைகள் குறித்தும் நான் பெருமைப்படுகிறேன்.

இந்தப் பெருமையும், சாதனையும் என்னுடைய அணி, சகவீரர்கள், பயிற்சியாளர்கள், ஆதரவாளர்கள், குடும்பத்தினர் இல்லாமல் நான் பெற்றிருக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்’’ எனத் தெரிவித்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்த ஓய்வுபெற்ற ரிக்கி பாண்டிங் டெஸ்ட் போட்டிகளில் அதிகமான ரன் குவித்தவர்களில் சச்சினுக்கு அடுத்து 2-ம் இடத்தில் உள்ளார்.ஒருநாள் போட்டிகளில் சச்சின், சங்கக்கராவுக்கு அடுத்து 3-வது இடத்தில் பாண்டிங் உள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 2003, 2007-ம் ஆண்டு உலகக் கோப்பைகளைப் பெற்றுக்கொடுத்தவர். 1999-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியிலும் பாண்டிங் இடம் பெற்றிருந்தார். கடந்த 2006, 2007-ம் ஆண்டுகளுக்கான ஐசிசி சிறந்த வீரருக்கான விருதையும் பாண்டிங் பெற்றுள்ளார்...

Google+ Linkedin Youtube