லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறுகிறது வேதாந்தா

சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது. லண்டன் பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடமிருந்து 33.5 சதவீத பங்குகளை 100 கோடி டாலருக்கு திரும்ப பெற உள்ளதாக கூறியுள்ளது. இது தொடர் பாக அந்த நிறுவனம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதில், வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் பங்கு தாரராக உள்ள வோல்கான் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத் தின் வசம் வேதாந்தா நிறுவனத்தின் 66.53 % பங்குகள் உள்ளன. இந்த நிலையில் ஒரு பங்கு 825 பென்ஸ் என்கிற வீதத்தில் பங்குகளை திரும்ப பெற உள்ளது. நிறுவனத்தின் மூன்று மாத வர்த்தகத்தின் அடிப்படையில் சராசரியிலிருந்து 14 % அதிக தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ள வோல்கான் குழுமம் பங்குகளை விற்க முன்வரும் முதலீட்டாளர்களுக்கு உதவுவதாக அறிவித்துள்ளது. பங்குகளை திரும்ப பெறுவதற்கான சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. வோல்கன் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை அகர்வால் வைத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி லண்டன் பங்குச் சந்தையில் வேதாந்தா பங்கு 646.8 பென்ஸ் விலையில் வர்த்தகம் முடிந்துள்ளது. இந்த விலையிலிருந்து தற்போது ஒரு பங்கிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 825 பென்ஸ் 27.6 சதவீதம் அதிகமாகும்.

முதலீட்டாளர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி 41 சதவீத டிவிடெண்ட் வழங்குவதில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் கூறுகையில், வேதாந்தா குழுமம் குடும்ப உறுப்பினர்கள் வசமே இருப்பதற்கான திட்டமில்லை. அடுத்த சில ஆண்டுகளில் வேதாந்தா குழுமத்திலிருந்து குடும்ப உறுப்பினர்கள் வெளியேறுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

வேதாந்தா குழுமம் இந்தியா வில் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இந்த குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட் டில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அப்போதிலிருந்து இந்த ஆலை மூடப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் முழுவதுமாக லண்டன் பங்குச் சந்தை பட்டியலிருந்து இருந்து வேதாந்தா வெளியேறும். லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறினாலும் வேதாந்தா நிறுவனம் மும்பை பங்கு சந்தையில் வர்த்தகமாகும். இந்த குழுமத்தின் மற்றொரு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனமும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் வேதாந்தா என்பது குறிப்பிடத் தக்கது.-ராய்ட்டர்ஸ்

Google+ Linkedin Youtube